வரும் 28-ம் தேதி புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் நாடாளுமன்றத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் பரபரத்துக்கொண்டிருக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாட்டின் `செங்கோல்’ தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டிருக்கிறார்.
பிரதமர் மோடி வரும் 28-ம் தேதி, நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்துவைப்பதுடன், சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் `செங்கோலை’ நிறுவவிருக்கிறார். ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரமடைந்தபோது, திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து அப்போதைய ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டனால் பெறப்பட்ட `செங்கோல்’, இந்தியாவின் முதல் பிரதமரான நேருவிடம் ஆட்சி மாற்றத்தை குறிக்கும்வகையில் வழங்கப்பட்டது.
இந்திய நிலப்பரப்பின் ஆட்சி மாற்ற அடையாளமாகக் கருதப்படும் இந்தச் செங்கோல் குறித்தான வரலாறுதான் என்ன… வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்!

வரலாறு விநோதமானது. சில முக்கியமான சம்பவங்களைச் சர்வ சாதாரணமாக விழுங்கிவிடும். 1947-ம் ஆண்டு, ஆகஸ்டு 15-ம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த சரித்திர நிகழ்வில், தமிழகத்தைச் சேர்ந்த திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குக் கிடைத்த பெருமையைப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதைத் தெரிந்துகொள்வோம்.

இந்தியாவின் கடைசி ஆளுநராக இருந்த மவுன்ட் பேட்டன், நேருவை அழைத்து, “இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுக்கப்போகிறோம். அதை எப்படி அடையாளப்படுத்துவது?” என்று கேட்க, குழப்பமடைந்த நேரு, உடனடியாக பதில் கூறவில்லை. அடுத்து மூதறிஞர் ராஜாஜியை அணுகி, “இதற்கு நீங்கள்தான் தீர்வு சொல்ல வேண்டும்” என்று கேட்டுக்கொண்டாராம்.
உடனே ராஜாஜி, ‘‘கவலை வேண்டாம். தமிழகத்தில் மன்னர்கள் ஆட்சி மாற்றம் செய்யும்போது, ராஜகுருவாக இருப்பவர் செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பார். அதுபோல நாமும் மகான் ஒருவர் மூலம் செங்கோல் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்” என்று கூறியிருக்கிறார். அப்போது இந்தியாவின் சைவ மடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன மடத்தின் 20-வது குருமகா சந்நிதானமாக இருந்தவர் அம்பலவாண தேசிகர் (1937 – 1951). அவரைத் தொடர்புகொண்ட ராஜாஜி, ஆட்சி மாற்றத்துக்கான சடங்குகளைச் செய்துதரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

அதன் பிறகு நடந்தவற்றை, 20-வது சந்நிதானத்தின் உதவியாளராக இருந்தவரும், தற்போது துபாய் நாட்டில் மகன் வீட்டில் வசித்துவருபவருமான 94 வயது மாசிலாமணி பிள்ளையை, அவருடைய மகன் இளங்கோவன் மூலம் தொடர்புகொண்டு கேட்டோம். “ஆதீனம் அந்த நேரத்தில் கடும் காய்ச்சலில் இருந்தார். ஆனாலும், சென்னையில் பிரபலமாக இருந்த உம்மிடி பங்காரு செட்டியார் நகைக் கடையில் சைவச் சின்னம் பொறித்த தங்கத்திலான செங்கோல் ஒன்றைத் தயாரித்துத் தரும்படிக் கேட்டுக்கொண்டார். அதன் எடையும் விலையும் தற்போது எனக்கு நினைவில் இல்லை. ராஜாஜி ஏற்பாடு செய்த தனி விமானத்தில், திருவாவடுதுறை ஆதீன மடத்தின் கட்டளை சாமியாக இருந்த, `சடைச்சாமி’ என்றழைக்கப்படும் திருவதிகை குமாரசாமி தம்பிரானையும், மடத்தின் ஓதுவார்களையும் டெல்லிக்கு அனுப்பிவைத்தார்கள். அவர்கள் கூடவே மங்கள இசை முழங்க மடத்து வித்வான் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை குழுவினரும் சென்றிருந்தனர்.
1947-ம் ஆண்டு, ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு 11:45 மணிக்கு, தேவாரத்தில் கோளறு பதிகத்திலுள்ள 11 பாடல்களைப் பாடுமாறு குருமகா சந்நிதானம் அருளியிருந்தார். அதன்படி ‘வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் தேவாரத் திருப்பதிகத்தின் 11-வது பாடலிம் கடைசி அடியான ‘அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே’ என்று பாடி முடிக்கும்போதே மவுன்ட் பேட்டனிடமிருந்து செங்கோலை சடைச்சாமி பெற்று, அதன்மீது புனிதநீர் தெளித்து, இறை நாமம் உச்சரித்து, நேருவிடம் கொடுத்தார். இது தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த விஷயம். நேரு கையில், செங்கோலை சடைச்சாமி தரும் அரிய புகைப்படம் திருவாவடுதுறை ஆதீன மடத்தில் இருப்பதை இன்றும் காணலாம்” என்றார்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தின் நூலகத்தில் நீண்டகாலம் பணியாற்றிய நாராயணசாமியைச் சந்தித்தபோது, “சுதந்திரம் பெறும் நிகழ்ச்சிக்கான மேடை அருகில், ராஜரத்தினம் பிள்ளையின் நாகஸ்வரக் கச்சேரி நடந்திருக்கிறது. அங்கே பெரும் கூட்டம் கூடியிருப்பதைக் கண்ட நேரு, ‘யார் அங்கு இருப்பது… ராஜாவா?’ என்று கேட்க, ‘நாகஸ்வர இசையுலகின் ராஜா’ என்று பதில் சொன்னார்களாம். இதை அந்த நிகழ்ச்சியில், தாளம் வாசித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த கோவிந்தராசு என்னிடம் சொன்னார். பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரிலுள்ள நேருவின் இல்லமான ஆனந்தபவன், அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆதீனம் வழங்கிய செங்கோல், தற்போது அங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது’’ என்றார்.

