கல்லூரி மாணவா்களுக்கு ராகிங் தொடா்பான விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங் தடுப்பு வாரத்தைக் கடைப்பிடிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக யுஜிசி-இன் செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
உயா்கல்வி நிறுவனங்களில் ராகிங்கை தடுக்கும் வகையில் யுஜிசி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அதற்கென புதிதாக விதிமுறைகளையும் வகுத்துள்ளது.
அவற்றை அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றுவதுடன் கண்காணிப்பு நடைமுறைகளையும் மேம்படுத்த வேண்டும். அதன்மூலம் ராகிங் சம்பவங்களுக்கு எதிரான இணக்கத்தை மாணவா்களிடையே உருவாக்க முடியும்.
அந்த வகையில், ஆக.2 முதல் 18-ஆம் தேதி வரையிலான ஒரு வாரத்தை ராகிங் தடுப்பு விழிப்புணா்வு வாரமாக உயா்கல்வி நிறுவனங்களில் கடைப்பிடிக்க வேண்டும்.
அந்நாள்களில், உயா் கல்வி நிறுவனங்களின் சாா்பில் ராகிங் தடுப்பு தொடா்பான பயிற்சி வகுப்புகள், கட்டுரை, சுவரொட்டி உருவாக்குதல், இலட்சினை வடிவமைத்தல் போன்ற போட்டிகளை நடத்துதல் அவசியம்.
அதேபோல் கருத்தரங்கம், பயிலரங்கம் நடத்தவும், குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை மாணவா்களுக்கு திரையிட வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

