தேனியில் தினமும் குடித்து விட்டு டார்ச்சர் கொடுத்த கணவனின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி மனைவி அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்துள்ள ராய வேலூர் பகுதியில் சண்முகவேல்(37) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அழகுசின்னு(31) என்ற மனைவி உள்ளார். இருவரும் கூலித்தொழிலாளி. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
குடிப்பழக்கத்திற்கு ஆளான சண்முகவேல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாளுக்கு நாள் இவரது தொல்லை தாங்க முடியாத மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர், சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். சில நாட்கள் அமைதியாக இருந்த சண்முகவேல் மீண்டும் குடித்துவிட்டு வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் குடித்துவிட்டு வந்த சண்முகவேல், மனைவியிடம் மீண்டும் தகராறு செய்திருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த மனைவி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சண்முகவேல் முகத்தில் தூவி அரிவாளை எடுத்து கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அழகுசின்னு காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சண்முகவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அப்போது அழகுசின்னு கூறியதாவது, கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த எங்களை உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சேர்த்து வைத்தனர். ஆனால் எனது கணவர் மது குடித்துவிட்டு என்னிடம் தகராறு செய்து வந்தார். அவருடன் வாழ பிடிக்கவில்லை. இதனால் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டி கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

