Delhi oi-Vigneshkumar
Published: Tuesday, July 11, 2023, 1:21 [IST]
டெல்லி: பொது சிவில் சட்டம் குறித்து மத்திய அரசு தொடர்ச்சியாகப் பேசி வரும் நிலையில், நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமியப் பெண்களிடம் பொது சிவிட் சட்டத்தில் இருக்கும் கருத்துகள் குறித்து நியூஸ் 18 நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. பாஜக தலைவர்கள் இப்போது யூனிஃபார்ம் சிவில் கோட் எனப்படும் பொது சிவில் சட்டம் குறித்துப் பேசி வருகின்றனர். நாட்டில் இப்போது பல்வேறு சிவில் சட்டங்கள் இருக்கும் நிலையில், அதை மாற்றி ஒரே சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதே கோரிக்கையாகும். இதற்கிடையே இந்த பொது சிவில் சட்டம் குறித்து நியூஸ் 18 செய்தி நிறுவனம் நாடு முழுக்க மிகப் பெரிய சர்வேவை நடத்தியுள்ளது. காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை நாடு முழுக்க உள்ள 25 மாநிலங்களில் உள்ள 8,035 முஸ்லிம் பெண்களை நேர்காணல் செய்து இந்த சர்வேவை எடுத்துள்ளது. சர்வே: இந்த சர்வே-இல் பொது சிவில் சட்டம் என்பதை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்ற போதிலும் அதில் கொண்டு வரப்படும் சட்டங்கள் பற்றிய கேள்விகளாகவே இது வரையறுக்கப்பட்டு இருந்தது. திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, பராமரிப்பு போன்ற விஷயங்களில் அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும் வகையில் ஒரு சட்டம் என்பது தான் பொது சிவில் சட்டமாகும். மத்திய அரசு மிக விரைவில் இது தொடர்பான சட்டத்தைக் கொண்டு வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பிரதமர் நரேந்திர மோடியே சமீபத்தில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாகப் பேசியிருந்தார். அதாவது பிரதமர் மோடி,”இந்தியாவிற்கு இப்போது தேவை பொது சிவில் சட்டம் தான். ஒரு நாடு எப்படி இரண்டு வேறு வேறு சட்டங்களைக் கொண்டு இயங்க முடியும்” என்று அவர் தெரிவித்தார். அதேபோல பெண்களின் திருமண வயது மற்றும் லிவ் இன் உறவு ஆகியவை குறித்து பொதுவான சட்டத்தைக் கொண்டு வர உள்ளதாக உத்தரகண்ட் அரசும் அறிவித்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு: பொது சிவில் சட்டம் குறித்து கூட்டங்கள் நடத்தப்படும் என்று சட்ட அமைச்சகம் ஏற்கனவே அறிவித்த நிலையில், அதற்கு முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. நாட்டின் எந்தவொரு சட்டமும் மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மீறக்கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. இந்தச் சூழலில் தான் இஸ்லாமியப் பெண்களிடம் இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 4 முதல் ஜூலை 8 வரை நடந்த இந்தக் கருத்துக் கணிப்பில் இஸ்லாமியப் பெண்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளனர். சமூக வலைத்தளத்தில் கருத்துக்கணிப்பை நடத்தாமல் நேரடியாகக் களத்திற்குச் சென்று இதை நடத்தியுள்ளனர். நாடு முழுக்க 18 முதல் 65+ வரையிலான 8,035 பெண்களிடம் இது குறித்துக் கேட்டுள்ளனர். பல்வேறு பிராந்தியங்கள், சமூகங்கள், கல்வி ஆகிய நிலைகளில் இருந்து வரும் பல பெண்களிடம் இந்த சர்வே நடத்தியுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள ஏழு கேள்விகள் முக்கியமானவை. முன்பே கூறியது போல இதில் பொது சிவில் சட்டம் என்ற வார்த்தை நேரடியாக இல்லை என்ற போதிலும், பொது சிவில் சட்டத்தில் இருக்கும் விஷயங்களை வைத்தே இந்த கேள்விகளை வடிவமைத்துள்ளனர். ஒரே சட்டம்: இதில் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை போன்ற தனிப்பட்ட விஷயங்களில் அனைத்து இந்தியர்களுக்கும் பொதுவான சட்டம் வேண்டும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 67.2 சதவீதம் பேர் ‘ஆம்’ என்றும் 25.4 சதவீதம் பேர் ‘இல்லை’ என்றும் பதிலளித்துள்ளனர். 7.4 சதவீதம் பேர் “தெரியாது” எனப் பதிலளித்துள்ளனர். முஸ்லீம் ஆண்கள் நான்கு பெண்களைத் திருமணம் செய்யும் உரிமை இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 76.5% பேர் இல்லை என்றும் 17.4% பேர் ஆம் என்றும் பதிலளித்துள்ளனர். அதேநேரம் 6.1% பேர் தெரியாது அல்லது பதில் கூற முடியாது எனப் பதிலளித்துள்ளனர். சொத்துரிமை: ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் வாரிசுரிமை மற்றும் சொத்தில் சம உரிமை இருக்க வேண்டுமா என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 82.3% பேர் ஆம் என்றும் 11.1% பேர் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். அதேநேரம் 6.6% பேர் தெரியாது அல்லது பதில் கூற முடியாது என பதிலளித்துள்ளனர். விவாகரத்து பெற்ற தம்பதிகள் எந்தவொரு தடையும் இல்லாமல் மறுமணம் செய்து கொள்ளலாம் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 73.7% பேர் ஆம் என்றும் 18% பேர் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். அதேநேரம் 8.3% பேர் தெரியாது அல்லது பதில் கூற முடியாது எனப் பதிலளித்துள்ளனர். எந்த மதமாக இருந்தாலும் தத்தெடுப்பு என்பது அனுமதிக்கப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு 69.9% பேர் ஆம் என்றும் 22.9% பேர் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். அதேநேரம் 12.2% பேர் தெரியாது அல்லது பதில் கூற முடியாது எனப் பதிலளித்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் முதியவர்கள் தங்கள் விருப்பப்படி சொத்தை யாருக்கு வேண்டுமானாலும் தரலாம் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 69.3% பேர் ஆம் என்றும் 16.6% பேர் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். அதேநேரம் 14.1% பேர் தெரியாது அல்லது பதில் கூற முடியாது எனப் பதிலளித்துள்ளனர். திருமண வயது: ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கும் சட்டப்பூர்வ திருமண வயது 21ஆக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு 78.7% பேர் ஆம் என்றும் 16.6% பேர் இல்லை என்றும் பதிலளித்துள்ளனர். அதேநேரம் 4.7% பேர் தெரியாது அல்லது பதில் கூற முடியாது எனப் பதிலளித்துள்ளனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
Mega survey amoung Indian Women on Uniform civil code: Majortiy of Indian Muslim Women are supporting the things mentioned in Uniform civil code.
Story first published: Tuesday, July 11, 2023, 1:21 [IST]

