வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்திய-அமெரிக்க இன்ஜினியரான ஹிர்ஷ் வர்தன் சிங், இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.. அதன்படி அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தலுக்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது. அதிபர் தேர்தல்: அங்கு ஒருவரால் அதிகபட்சம் இரண்டு முறை அதிபராக இருக்க முடியும்.
அதன்படி முதல்முறை அதிபராக இருப்பவர் எப்போதும் இரண்டாம் முறையும் போட்டியிடுவார். டிரம்பும் கடந்த முறை அப்படியே போட்டியிட்டார். அதேபோல ஜனநாயக கட்சி சார்பில் பைடனும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், கிட்டதட்ட இது இறுதியாகவிட்டது. அதேநேரம் அங்கு இப்போது பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சியில் இருந்து பலரும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குடியரசு கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி ஏற்கனவே நிக்கி ஹேலி மற்றும் விவேக் ராமசாமி ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். ஹிர்ஷ் வர்தன் சிங்: இதற்கிடையே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிர்ஷ் வர்தன் சிங் என்பவரும் மூன்றாவது நபராக வெள்ளை ரேஸில் இணைந்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றை அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 38 வயதான அவர், அங்குள்ள நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவர்.. இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் தான் எப்போதும் குடியரசுக் கட்சியில் தான் இருப்பேன் என்றும் அமெரிக்காவின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 3 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அவர், “கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சரி செய்யவும் அமெரிக்காவின் மதிப்புகளை மீட்டெடுக்கவும் நமக்கு வலுவான தலைமை தேவை. இதன் காரணமாகவே 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கிறேன்” என்று அவர் தெரிவித்தார். கொரோனா வேக்சின் சர்ச்சை: தன்னை ஒரே தூய்மையான வேட்பாளர் எனக் குறிப்பிட்ட ஹிர்ஷ் வர்தன், தான் ஒருபோதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு அடிபணியவில்லை என்றும் தெரிவித்தார். குடியரசு கட்சியைப் பொறுத்தவரை அங்கே பழமைவாத சிந்தனை கொண்டவர்களே அதிகம். கொரோனா என ஒன்றே இல்லை எனச் சொல்லும் அவர்கள், கொரோனா வேக்சினை நம்பாதவர்கள். அவர்களைக் குறிவைத்தே ஹிர்ஷ் வர்தன் தான் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளாதவர் என்று கூறியுள்ளார்.
“மீண்டும் மீண்டுமா..” டிரம்பிற்கு எகிறும் ஆதரவு! பைடனை கைவிடும் அமெரிக்கர்கள்! அப்போ அடுத்து அதுதானா ஹிர்ஷ் வர்தன் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தாலும் கூட அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் ரொம்பவே குறைவு.. அவர் ஏற்கனவே கடந்த 2017 மற்றும் 2021 இல் நியூ ஜெர்சியின் ஆளுநர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இருப்பினும், அவரால் அதிலும் வெல்ல முடியவில்லை. அதிபர் தேர்தல்: அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு என்பது தனித்துவமானது. அங்குக் குடியரசு கட்சியும் ஜனநாயக கட்சியும் மட்டுமே பிரதானமாக இருக்கும் நிலையில், இரு கட்சியின் சார்பிலும் போட்டியிடப் பலரும் விருப்பம் தெரிவிப்பார்கள். பின்னர் அங்குள்ள பல்வேறு மாகாணங்களிலும் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு, அதில் யாருக்கு அதிக வாக்கு கிடைக்கிறதோ அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்தக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்.
அதன்படி தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி, ஹிர்ஷ் வர்தன் சிங் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தவிர முன்னாள் அதிபர் டிரம்ப், முன்னாள் துணை அதிபர் பைக் பென்ஸ் எனப் பலரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் இடையே உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டே அதிபர் வேட்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும்.

