தனது 6 வயது மகனை கிணற்றில் வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் சிவகிரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள தென்மலை செல்லிபட்டினம் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (45). இவரது மனைவி கார்த்தீஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். முனியாண்டிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் முனியாண்டிக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த முனியாண்டி, தனது இளைய மகன் மகிழன் (6) படிக்கும் பள்ளிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மகிழனை மிட்டாய் வாங்கித்தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்றுள்ளார்.
வழக்கமாக மாலையில் வீடு திரும்பும் மகிழன் வராததால் தாய் கார்த்தீஸ்வரி பல இடங்களில் தேடியுள்ளார். தொடர்ந்து சிவகிரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். பள்ளி சிறுவனை காணவில்லை என போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவனைத் தேடி வந்தனர்.
இதனிடையே முனியாண்டியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் புளியங்குடிக்கு தனது மகன் மகிழனை அழைத்துச் சென்றதாகவும், அங்குள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கி விட்டு அருகே இருந்த தனியார் தோப்பிற்கு சென்று மது அருந்தியதாகவும், தோப்பில் உள்ள கிணற்றில் மகிழனை வீசி கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கிணற்றில் இருந்து சிறுவன் மகிழன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுமப்பி வைத்தனர். இதுகுறித்து புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து முனியாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற மகனை குடிபோதையில் கிணற்றில் வீசி தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

