மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகத்தை அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மாலை தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு, மீனவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் மீனவர்களுக்காக அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு மீனவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தற்போது திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை, நிதியையும் குறைத்துவிட்டனர். மீன்பிடி தடைக்கால நிவாரணத்தைக் கூட திமுக அரசு முறையாக வழங்கவில்லை, மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 1058 பேருக்கு இதுவரை தடைகால நிவாரணம் வழங்கப்படவில்லை. இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை மீட்டு கொண்டு வருதற்கான அனைத்து செலவுகளையும் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசே செய்து வந்தது.
திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன. 5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று சொல்லியவர்கள் முக்கியமான துறைகளில் கூட காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை” என்றார். முன்னதாக தரங்கம்பாடி வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அப்பகுதி மீனவர்கள் பட்டாசு வெத்து உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செய்லாளர் எஸ்.பவுன்ராஜ், அதிமுக நிர்வாகிகள், தரங்கம்பாடி உள்ளிட்ட மீனவப்பஞ்சாயத்தார் உடனிருந்தனர்.

