அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 51 கிலோ தக்காளியை துலாபாரமாக தம்பதி ஒருவர் காணிக்கையாக கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திரா மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கா அப்பா ராவ், இவரது மனைவி மோகினி. இவர்களுக்கு பாவிஷ்யா என்ற மகள் உள்ளனர்.
தம்பதி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். வேண்டுதல் நிறைவேறினால் தங்க மூக்குத்தி காணிக்கையாக அளிப்பதாக வேண்டினர். அந்த வேண்டுதல் நிறைவேறிய நிலையில் தங்க மூக்குத்தியை காணிக்கையாக கொடுக்க முன்வந்தனர்.
அதன்படி நுகலம்மா கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனர். அங்கு கோயில் நிர்வாகத்திடம் தங்க மூக்குத்தி காணிக்கை குறித்து தம்பதி தெரிவித்தனர். அதற்கு நிர்வாகம் சார்பில் அன்னபிரசாதம் தயாரிக்க தக்காளி தேவைப்படுகிறது. ஆனால் தக்காளியை யாரும் தானமாக தரவில்லை. எனவே நீங்கள் மூக்குத்திக்கு பதிலாக தக்காளியை காணிக்கையாக தரலாம் என கூறியுள்ளனர்.
அதன்படி தம்பதியினர் தங்கள் மகளின் எடைக்கு எடை தக்காளியை துலாபாரம் வைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று கோயில் துலாபாரத்தில் தங்கள் மகளை அமர வைத்து எடைக்கு எடை தக்காளியை அவர்கள் தானமாக கொடுத்தனர். அந்த தக்காளி உடனடியாக அன்னபிரசாதத்தில் பயன்படுத்த கொண்டு செல்லப்பட்டது.
அதாவது அந்த சிறுமியின் எடை 51 கிலோ இருந்தது. அதன்படி 51 கிலோ எடை கொண்ட தக்காளி பழம் காணிக்கையாக கொடுக்கப்பட்டது. பொதுவாக கோயில்களில் வெல்லம், சர்க்கரை, நாணயம் உள்ளிட்டவற்றை எடைக்கு எடை தானமாக கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறோம்.
ஆனால தக்காளியை துலாபாரத்தில் வைத்து தானாக கொடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அண்மைக்காலமாக வரத்து குறைவாக இருப்பதால் தக்காளியின் விலை இந்தியா முழுவதும் அதிகமாகவே விற்கப்படுகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ 100 முதல் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

