இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மல்யுத்த வீராங்கனைகள் பல மாதங்களாகப் போராடி வருகின்றனர். வீராங்கனைகளுக்கு ஆதரவாக மல்யுத்த வீரர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீதிமன்ற உத்தரவின்பேரில், பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இந்த விவகாரத்தில் பா.ஜ.க எம்.பி-யான அவர்மீது சிறுமி ஒருவரும் பாலியல் புகாரளித்திருப்பதால், போலீஸார் போக்சோ சட்டத்திலும் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்கு பதிவுசெய்திருகின்றனர்.
தாங்கள் அளித்திருக்கும் புகாரின்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றக் கோரிக்கையுடன் நேற்று, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி மல்யுத்த வீராங்கனைகள், வீரர்கள் பேரணியாகச் செல்ல திட்டமிட்டிருந்தனர். அவர்களுக்கு விவசாயிகளும், சில அமைப்புகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன. அவர்கள் பேரணியாக புதிய நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்றபோது, தடுத்து நிறுத்திய டெல்லி போலீஸார், அனைவரையும் கைதுசெய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர். மேலும் அவர்கள்மீது ஐ.பி.சி பிரிவு 147, 149, 186, 188, 332, 353, PDPP சட்டத்தின் பிரிவு 3, ஆகியவற்றின்கீழ் வழக்கு பதிவுசெய்தனர்.

