படிக்காததுனால தான் எங்க அப்பா அம்மா இப்போ வெயில்லயும், மழையிலயும் கூலி வேலை பார்த்து கஷ்டப்படுறாங்க. நாங்களாவது படிச்சு முன்னேறிடுவோம்னு நம்பிக்கையோட இருந்தோம். ஆனா இந்த பழங்குடியினர் பிரிவு சாதிச்சான்றிதழ் இல்லாதது எங்க கல்விய பாதியோட நிறுத்திடுமோன்னு பயமா இருக்கு. இதே மாதிரியான நிலைமை நீடிச்சா நாங்களும் எங்க அப்பா அம்மா மாதிரியே தெருத்தெருவாக போயி பிளாஸ்டிக் பொருள் தான் விற்கணும். உடனடியா தமிழ்நாடு அரசாங்கமும், திருவாரூர் மாவட்ட நிர்வாகமும் எங்களுக்கு பழங்குடியினர் பிரிவுல சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கணும்” என்றனர் வேதனையுடன்.
மாணவர்களின் இப்பிரச்னை தொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம், “சம்பந்தப்பட்ட மாணவர்கள், மனு அளித்தால், மாவட்ட நிர்வாகம் சார்பில், உரிய அதிகாரிகள் மூலம் விசாரணை செய்து, அவர்களது இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கான, நடவடிக்கை எடுப்போம்” எனக் கூறினார்..
திருவாரூர் மாவட்டத்தில் பழங்குடியினர் பிரிவு சாதி சான்றிதழ் இல்லாமல் 80-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. கல்வி கற்றாவது, இந்த சமுதாயத்தில் முன்னேறி விட வேண்டும் என்ற கனவோடும், ஏக்கத்தோடும் காத்திருக்கும் மாணவர்களுக்கு சரியான சாதி சான்றிதழ் வழங்கி அவர்களின் கல்வி கனவு தொடர்வதற்கு வழிவகை செய்வாரா முதல்வர்..?!

