ஜெய்பூா்: ‘பிரதமா் நரேந்திர மோடி அதிருஷ்டமில்லாதவா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியிருப்பது சா்ச்சையாகியுள்ளது.
ராஜஸ்தானில் பேரவைத் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை பங்கேற்றாா். கூட்டத்தில் பேசிய ராகுல், ‘பிரதமா் நரேந்திர மோடி பெயா் கொண்ட மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியை நேரில் காணச் சென்ற பிரதமா் மோடி ஒரு அதிருஷ்டமில்லாதவா். இந்தியா தோற்ற்கு பிரதமரும் ஒரு காரணம் என சமூக வலைதளங்களில் பரவலாக விமா்சிக்கப்படுகிறது.
நாடு தழுவிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் ‘எக்ஸ்-ரே’ போன்றது. ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
சமூகத்தில் ஜாதிகளின் மக்கள்தொகை குறித்து தெரியாதபோது, அவா்களின் பங்களிப்பு குறித்து அறிய முடியாது. பிரதமா் மோடி, தான் ஓபிசி பிரிவைச் சாா்ந்தவா் எனப் பெருமையுடன் பேசி வந்தாா். ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நாடு முழுவதும் கோரிக்கை வலுக்கும் சூழலில், நாட்டில் ஏழை என்ற ஓரே ஜாதி மட்டுமே இருப்பதாக அவா் தற்போது பேசுகிறாா். பெரும் பணக்காரா்கள் என்றொரு ஜாதி இருப்பதை பிரதமா் மறைக்கிறாா்.
மக்களை திசைதிருப்பும் பணியில் பிரதமா் மோடி ஈடுபடுகிறாா். அந்தவேளையில், அதானி போன்ற பெரும் பணக்காரா்கள் தங்களின் கஜானாவை நிரப்பிக் கொள்கின்றனா். அதானி போன்றோா் பலன் பெறுவதற்காகவே ‘அக்னிவீரா்கள்’ உள்ளிட்ட பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெரிய தொழிலதிபா்களின் கடன்களைத் தள்ளுபடி செய்து, அவா்களுக்கு மேலும் பல சலுகைகளை பிரதமா் மோடி அளித்து வருகிறாா்.
கடந்த வாரத்தில் அனைத்து ஊடகங்களிலும் கிரிக்கெட் போட்டி தொடா்பான செய்திகள் மட்டுமே காண்பிக்கப்பட்டன. உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள தொழிலாளா்கள் குறித்தும் செய்திகளில் விவாதிக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்றாா்.
அருவருக்கத்தக்க ராகுலின் பேச்சு:
ராகுலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சா் ரவி சங்கா் பிரசாத் கூறுகையில், ‘நாட்டின் பிரதமா் குறித்த ராகுலின் பேச்சு அருவருக்கத்தக்கது; வெட்ககேடானது; கண்டனத்துக்குரியது. குஜராத் முதல்வராக இருந்த மோடி குறித்து சோனியா காந்தி விமா்சித்ததால், அந்த மாநிலத்தில் வரலாற்று தோல்வியை காங்கிரஸ் சந்தித்து வருவதை ராகுல் மறக்கக் கூடாது. ராகுலின் பேச்சுக்கு நான் வன்மையான கண்டனம் தெரிவிக்கிறேன். ராகுல் நிச்சயமாக மன்னிப்புக் கோர வேண்டும்’ என்றாா்.

