புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா பற்றிய செய்தி வெளியானதும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, “வி.டி. சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். கட்டடத்திற்கு ‘சாவர்க்கர் சதன்’ என்றும் சென்ட்ரல் ஹாலுக்கு ’மன்னிப்பு அறை’ என்றும் அவர் பெயரிடவேண்டும்.”என்று டிவிட்டரில் பதிவிட்டார்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்த பதவியேற்பு விழாவை “நமது எல்லா நிறுவக தந்தைகள் மற்றும் தாய்மார்களின் முழுமையான அவமதிப்பு” என்று கூறினார். மேலும், ”இது காந்தி, நேரு, படேல், போஸ், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் முழு மறுப்பு” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு தினம் என்பதால் 2023ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதிய பார்லிமென்டின் திறப்பு விழாவுக்கு ஏற்ற நாளாக இருந்திருக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ராய் ட்வீட் செய்துள்ளார். “ஆனால் இது சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28 அன்று செய்யப்பட உள்ளது. இது எவ்வளவு பொருத்தமானது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கப் போவது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அல்லது இரு அவைகளின் தலைவர்களில் ஒருவரால் திறக்கப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“குடியரசுத்தலைவரை நாடாளுமன்றத்தை திறந்து வைக்க அழைக்காதது அல்லது விழாவிற்கு அழைக்காதது, நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயலாகும். நாடாளுமன்றம் ஆணவத்தின் செங்கற்களால் ஆனது அல்ல, அரசியலமைப்பு மதிப்புகளால் ஆனது,” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

