
சென்னை: "பாஜகவை வீழ்த்துவதை அனைத்து தலைவர்களும், ஒற்றை இலக்காக கொண்டிருக்கிறார்கள். பாஜகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நினைத்தோம். அந்த ஒற்றுமை பாட்னாவிலே ஏற்பட்டிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். ஆலோசனைக் கூட்டம் முடிந்து சென்னை விமான நிலையம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்த்தித்தார். அப்போது அவர் கூறியது: "மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழகத்தில் கிடைத்த அத்தனை வெற்றிகளுக்குமான காரணமாக அமைந்தது. அதேபோல, அகில இந்திய அளவிலும் ஒற்றுமைதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தி வற்புறுத்தினேன். சில முக்கியமான ஆலோசனைகளையும் நான் அந்தக் கூட்டத்திலே வழங்கினேன்.

