வடசென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், எண்ணூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 22.4.2023-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், “நான் என்னுடைய குடும்பத்தினருடன் வசித்துவருகிறேன். என்னுடைய தந்தை வேலை பார்த்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் டாக்டர் சபரிமோகன் என்பவர் பணியாற்றினார். எனக்கு ஏற்பட்ட உடல் உபாதைக்காக சிகிச்சை பெற டாக்டர் சபரிமோகனைச் சந்தித்தேன். அதன் பிறகு அவர் என்னுடன் பழக ஆரம்பித்தார். 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நெருக்கமாக நானும் டாக்டர் சபரிமோகனும் பழக ஆரம்பித்தோம்.

அவர்மீது எனக்கு மரியாதையும், நம்பிக்கையும் இருந்தது. இந்த நிலையில் சபரிமோகன் என்னிடம், `நாம் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாமா?’ எனக் கேட்டார். அதற்கு முதலில் நான் தயங்கினாலும், நாளடைவில் அவர் தொடர்ந்து வற்புறுத்தியதால் அவரைத் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தேன். அப்போது இரு தரப்பு பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சபரிமோகனிடம் கூறினேன். அதற்கு அவர், `உன்னை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டது. உன்னுடைய நல்ல குணம், நன்னடத்தைக் காரணமாக எனக்கு உன்னைத் திருமணம் செய்துகொள்ள முழுவிருப்பம். மேலும் உன்னைத் திருமணம் செய்துகொள்வதில் என்னுடைய பெற்றோர் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள்’ என்று கூறினார். இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் சபரிமோகன், என்னுடைய செல்போன் நம்பருக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்ப ஆரம்பித்தார். அது எனக்கு தர்மசங்கடமாக இருந்தது. ஆபாச மெசேஜ் அனுப்பியது குறித்து சபரிமோகனை நான் கண்டித்தேன். அதற்கு அவர், `நாம் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். அந்த உரிமையில்தான் அவ்வாறு மெசேஜ் அனுப்பினேன்’ என்று கூறினார்.
மேலும் அவர், `இது போன்று நீயும் எனக்கு மெசேஜ் அனுப்பு’ என்று சபரிமோகன் கூறினார். அதன் பிறகும் அவ்வப்போது சில ஆபாசமான படங்கள் மற்றும் அது சம்பந்தப்பட்ட லிங்க்கை எனக்கு அனுப்பி, அவற்றைப் பார்க்கச் சொல்லி என்னை வற்புறுத்தினார். பதிலுக்கு என்னையும் அனுப்பச் சொல்வார். அந்தச் சமயத்தில் அவர் எனக்கு மீண்டும் மீண்டும் கொடுத்த நம்பிக்கையின் பெயரிலும் அவர் என்னையே திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று அவர்மீது எனக்கு இருந்த நம்பிக்கையின் பெயரில் நானும் அவர் கூறியபடி நடந்துகொண்டேன்.
அவர் மருத்துவர் என்ற முறையில் சிறிது சிறிதாக என்னுடைய உணர்ச்சிகளைத் தூண்டினார். அதனால் நான் செய்வது என்னவென்று தெரியாத மனநிலையில், என்னுடைய முழு விருப்பத்துக்கு மாறாக என்னுடன் உடலுறவுகொண்டு என்னை சீரழித்துவிட்டார். தொடர்ந்து எனக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததால் அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன்.

அதனால், `என் விருப்பப்படி நீ நடந்துகொள்ளாமல் இருந்தால், நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன்’ என்றும் `நம்முடைய அந்தரங்க உறவு குறித்து, உன்னுடைய பெற்றோரிடம் சொல்வேன். தேவைப்பட்டால் போட்டோக்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் அப்லோடு செய்துவிடுவேன்’ என்று கூறி மிரட்டினார். அப்போதுதான் அவர் என்னுடன் தவறாக நடந்துகொண்டதை செல்போனில் பதிவுசெய்து வைத்திருப்பதை சபரிமோகன் என்னிடம் தெரிவித்தார். அதைக் கேட்டவுடன் நான் அதிர்ச்சியடைந்தேன். வேறுவழியின்றி நான் செய்வதறியாமல் இருந்துவிட்டேன். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் என்னை லாங்க் டிரைவிங் கூட்டிச் செல்வதாகக் கூறி, கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரச்சொன்னார். அங்கு நான் சென்றபோது அவர் என்னை காரில் அழைத்துச் சென்றார். மதுரவாயலிலுள்ள அவருடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து என்னைக் கட்டாயப்படுத்தி உடலுறவுகொண்டார். அப்போது நான் வருத்தப்பட்டபோது, `நான் உன்னை விரைவில் திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று ஆறுதல் கூறினார்.
இந்தச் சூழலில் எங்கள் வீட்டில் எனக்குத் திருமணம் செய்ய முடிவெடுத்தார்கள். அப்போது நான் டாக்டர் சபரிமோகனை காதலிக்கும் தகவலைத் தெரிவித்தேன். அதனால் அவரிடம் திருமணம் குறித்துப் பேச என்னுடைய பெற்றோர் சென்றபோது, அவர் அலைக்கழித்தார். இந்த நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரியில் சபரிமோகனுக்கும் வேறு ஒரு டாக்டர் பெண்ணுடன் திருமண ஏற்பாடுகள் எனக்குத் தெரியாமல் ரகசியமாகச் செய்து, நிச்சயதார்த்தமும் முடிந்து ஏப்ரல் 24-ம் தேதி கும்பகோணத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனக்குத் தெரியவந்தது. அதனால் நான் அதிர்ச்சியடைந்தேன். இதையடுத்து, டாக்டர் சபரிமோகனின் சகோதரர் டாக்டர் வைத்தீஸ்வரன் என்பவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவரிடம் எந்த பதிலும் இல்லை.

இதையடுத்து சபரிமோகனை நேரில் சந்தித்து என்னுடைய குடும்பத்தினர் கேட்டபோது, `நான் டாக்டர் என்பதால் டாக்டர் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். தேவைக்காகப் பழகினேன்’ என்று கூறியதோடு, குடும்பத்தையும் என்னையும் அநாகரிகமாகப் பேசினார். அதனால் எண்ணூர் காவல் நிலையத்தில் ஏப்ரல் 14-ம் தேதி புகாரளித்தேன். அதன்பேரில் 17-ம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது சபரிமோகன், அவரின் வழக்கறிஞரை மட்டுமே பேசவிட்டு ஒருதலைபட்சமாக போலீஸார் விசாரித்தனர். அதோடு என்னுடைய தந்தையை அவதூறாகவும் பேசினர். அதனால்தான் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கிறேன். சபரிமோகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்கவிருப்பதால், அதைத் தடுத்து நிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுத்து என்னைக் காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அந்தப் பெண் புகாரின்பேரில் எண்ணூர் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, டாக்டர் சபரிமோகனிடம் விசாரணை நடத்த முடிவுசெய்திருக்கிறார்கள்.

