ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர்-அஜிஷா தம்பதிக்கு ஒன்றறை வயதில் ஆண் குழந்தை ஒன்று இருக்கிறது. குறைமாதக் குழந்தை என்பதால், இதயம் தொடர்பான பிரச்னையும், `hydrocephalus’ எனும் மூளையில் நீர் வெளியேறும் மண்டலத்தில் அடைப்பும் குழந்தைக்கு ஏற்பட்டிருந்தது. 2022 மார்ச் மாதம், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, hydrocephalus நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின்போது குழந்தைக்கு மூளை மண்டலத்திலிருந்து வயிற்றுப் பகுதிக்கு நுண்ணிய குழாய் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் குழந்தையின் உடலில் செலுத்தப்பட்ட நுண்ணிய குழாய், ஆசனவாய் வழியாக வெளியேறியதால், 25-ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, அன்றிரவு மீண்டும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, நுண்ணிய குழாய் மீண்டும் குழந்தைக்குப் பொருத்தப்பட்டது
தொடர் கண்காணிப்பிலிருந்த குழந்தைக்குச் சிகிச்சைக்காக, வலது கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டு, மருந்து செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி குழந்தையின் கையில் வீக்கம் ஏற்பட்டு, கை விரல்கள் சிவக்கத் தொடங்கின. பரிசோதனைக்குப் பிறகு, குழந்தையின் கை அழுகிவிட்டதாகவும், கையை அகற்றாவிட்டால் உயிருக்கே பாதிப்பு ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

