
சிங்கப்பூர்: லீ குவான் யூவுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள், எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (24.05.2023) சிங்கப்பூரில், சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், வேர்களைத் தேடி என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.
வேர்களைத் தேடி என்று புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தெரிவு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

