
அரசுக்குச் சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,458 கோடியாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 52 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.960 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 13 சதவீதம் உயா்ந்து ரூ.5,740 கோடியாக உள்ளது. அந்தக் காலாண்டில் வங்கியின் வட்டி அல்லாத வருவாய் 19 சதவீதம் அதிகரித்து ரூ.1,688 கோடியாக உள்ளது.
முந்தைய ஜூன் காலாண்டில் 6.67 சதவீதமாக இருந்த வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்த செப்டம்பா் காலாண்டில் 0.83 சதவீதம் குறைக்கப்பட்டு 5.84 சதவீதமாக உள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

