- புதுச்சேரி : ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கான கமிட்டி கூட்டத்தில், தனது கருத்து கேட்கப்படவில்லை என அதிருப்தி தெரிவித்து புதுச்சேரி தலைமை நீதிபதி உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காலாப்பட்டு மத்திய சிறையில் 300க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், ஆயுள் தண்டனை பெற்ற 11 கைதிகள் 14 ஆண்டுகள் கடந்தும் சிறையில் உள்ளனர். இந்த கைதிகளை நன்னடத்தை விதிகளின்படி விடுதலை செய்ய, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையிலான கமிட்டி கடந்த 30ம் தேதி கூடியது.
புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன், தலைமை செயலர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், சிறை ஐ.ஜி., ரவிதீப்சிங்சாகர் உள்ளிட்ட 7 பேர் பங்கேற்றனர். கூட்டத்தில், 11 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
இதை அறிந்த ஆயுள் தண்டனை கைதிகளின் உறவினர்கள், நேற்று புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரனை நீதிமன்றத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கொலை வழக்கில் கைதான ஒருவர் 21 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவருக்கு சிறை நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தும், விடுதலை செய்ய கமிட்டி நிராகரிக்கிறது. கமிட்டியில் 7 உறுப்பினர்கள் இருந்தும், டி.ஜி.பி., மட்டுமே கைதிகளின் விடுதலை குறித்து முடிவு செய்ததாகவும், நீதித் துறையின் கருத்து கேட்கவில்லை என தெரிய வருகிறது. கமிட்டியில் உள்ள 7 நபர்களின் கருத்துக்களையும் பதிவு செய்து, கடைசியாக சேர்மன் முடிவு செய்ய வேண்டும்.
தலைமை நீதிபதியின் கருத்து கேட்கப்படாமல் கூட்டம் முடிந்துள்ளது. இது, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறிய செயல். ஜனநாயக முறையில் கூட்டம் நடக்கவில்லை என்பதால், தன்னை இந்த கமிட்டியில் இருந்து நீக்கி விடுங்கள் என புதுச்சேரி அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதி உள்ளார்.
தலைமை நீதிபதி சிறைக்கு சென்று கைதிகளின் நடத்தைகளை ஆய்வு செய்துள்ளார். ஆனால், கமிட்டி கூட்டத்தில் நீதிபதி கருத்து தெரிவிக்க வாய்ப்பு அளிக்காமல் டி.ஜி.பி., மட்டும் முடிவு செய்வது அரசியல் உள்நோக்கம் உள்ளதாக தெரிகிறது.


புதுச்சேரி தலைமை நீதிபதி சந்திரசேகரன் அவர்களின் பரிந்துரையை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் பரிந்துரைக்கு முடிவு தெரியும் வரை புதுச்சேரி சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கூடாது இப்படி செய்தால் தான் சட்டத்தையும் நீதிமன்ற நீதிபதிகளையும் அரசியல்வாதிகளும் காவல் அதிகாரிகளும் மரியாதையை தருவார்கள் இல்லையேல் அவர்கள் விருப்பப்படி அதாவது சட்டத்திற்கு புறம்பாக நடந்து கொள்வார்கள்