`தமிழ்நாட்டில் முன்னாள் முதல்வர் ஊழல் செய்ததற்காக சிறை சென்றிருக்கிறார்’ என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருந்தது, அதிமுக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருக்கிறது. அதனால், அதிமுக – பாஜக கூட்டணி என்னவாகும் என பெரும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அதிமுக எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை எதிர்த்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் தெரிவித்திருக்கிறார். தீர்மானத்தில், “அ.தி.மு.க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஒன்றரைக் கோடி தொண்டர்களுடைய மனதிலும், பொதுமக்கள் மனதிலும் நீங்கா இடம்பிடித்து, வாழும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிகைக்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ள முடியாத, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறு கருத்தை பேட்டியாகக் கொடுத்துள்ளார். இதனால், தமிழகத்தில் வாழும் தெய்வமாக இருக்கும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மனதில் மிகப் பெரிய வேதனையையும், மனஉளைச்சலையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களான வாஜ்பாய், அத்வானி மற்றும் தேசிய அளவிலான பல்வேறு கட்சிகளின் மூத்த தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தார்கள். தேசிய தலைவருக்கு நிகரான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பல தலைவர்கள் அவரது இல்லத்திலேயே நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள். பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருக்கிறார். சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளையும் நடத்தி இருக்கிறார்.
தற்போதைய தேசிய கட்சியான பா.ஜ.க, மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு மூலக் காரணமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து அறிமுகப்படுத்தி, 1998-ல் முதன்முதலில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையப்பெற, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பெரும்பான்மையான கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அளிக்கச் செய்ததோடு, பா.ஜ.க-வின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றதற்கும் அரும்பாடுபட்டவர்.

அதே போல், 20 ஆண்டு காலமாக தமிழக சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த பா.ஜ.க-விற்கு 4 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர், எடப்பாடி K பழனிசாமி தலைமையிலான அதிமுக. தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 16 ஆண்டுகள் பதவியில் இருந்து, பல்வேறு வரலாற்றுச் சிறப்பு மிக்க மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி, தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களை மற்ற மாநிலங்களும் பின்பற்றும் வகையில் சிறப்புமிகு நல்லாட்சியை வழங்கியவர். தேசிய அளவில் பல்வேறு திட்டங்களுக்கு முன்உதாரணமாக வழிகாட்டிய மகத்தான தலைவர். தமிழ் நாட்டின் வரலாற்றில் ஆண்ட கட்சியை மீண்டும் ஆட்சியில் அமரவைத்து சாதனை படைத்தவர். இத்தகைய போற்றுதலுக்குரியவரை, பொதுவெளியில் எந்தவிதமான அரசியல் அனுபவமும், முதிர்ச்சியும் அற்ற பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் பொறுப்பற்ற முறையில் பேட்டி அளித்துள்ளதற்கு, அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

