“இரண்டாண்டு தி.மு.க ஆட்சியில் துரும்பைக்கூட அவர்கள் கிள்ளிப் போடவில்லை எனச் சொல்லிவிட முடியுமா… சாதனை விளக்கப் பொதுக்கூட்டமே நடத்தினார்களே…”
“தி.மு.க எதுவுமே செய்யவில்லை என நாங்கள் சொல்லவில்லை. பலவற்றைச் செய்திருக்கின்றனர், மின் கட்டணத்தை மூன்று, நான்கு மடங்கு உயர்த்தியிருக்கின்றனர், சொத்து வரியை 100% உயர்த்தியிருக்கிறார்கள், அதனால் வீட்டு வாடகைகள் உயர்ந்திருக்கிறது. ஆம்னி பஸ் கட்டணங்களை உயர்த்தியிருக்கிறார்கள், பால் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் விலையை உயர்த்தியிருக்கின்றனர். கட்டுமானப் பொருள்களின் விலையை ஏற்றியிருக்கின்றனர். அம்மா சிமென்ட்டை வலிமை சிமென்ட் என அறிவித்து அதிக விலைக்கு விற்கிறார்கள், இவர்களால் எந்த அளவுக்கு மக்களை வதைக்க முடியுமோ… அந்த அளவுக்கு எல்லா வேலைகளையும் செய்துவிட்டார்கள். இதையே சாதனை எனக் குறிப்பிட்டுப் பேசினாலும் இவர்கள் பேசுவார்கள். இரண்டாண்டு ஆட்சியில் எந்தச் சாதனையுமே செய்யாமல் 1000-த்துக்கும் மேற்பட்ட சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தை நடத்தியதுதான் இவர்களின் சாதனை.”
“சரி, எதிர்க்கட்சியாக அ.தி.மு.க முறையாகச் செயல்பட்டதா… உட்கட்சிப் பிரச்னைகளுக்கு நேரம் சரியாக இருந்ததாக விமர்சனங்கள் எழுகின்றனவே?”
“அ.தி.மு.க உட்கட்சிப் பிரச்னைகள் நிறைவடைந்துவிட்டன. அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். உட்கட்சிப் பிரச்னை இருந்தபோதிலுமே அ.தி.மு.க ஒரு பொறுப்பான மற்றும் வலிமையான எதிர்க்கட்சியாகத்தான் செயல்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் 14-வது ஆர்ப்பாட்டத்தை மே 29-ம் தேதி நடத்தியிருக்கிறோம். 13 முறை மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஒரே கட்சி அ.தி.மு.க. சட்டமன்றத்துக்குள்ளாக தி.மு.க ஆளுநரை குறை சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு எதிராக முதல் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்தவர் எதிர்க்கட்சித் எடப்பாடி பழனிசாமி.

