சென்னை: ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் பெயரில் பேஸ்புக்கில் போலி ஐடி தொடங்கி ரூ.2 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக சென்னை காவல் ஆணையரகத்தில் பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை உள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலப்பணிகள் இந்த அறக்கட்டளை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலியாக பேஸ்புக் முகவரி ஏற்படுத்தி ரூ. 2 கோடி பண மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சென்னை காவல் ஆணையரகத்தில் ரஜினி பவுண்டேஷன் அறங்காவலர் சிவராமகிருஷ்ணன் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற பெயரில் போலி பேஸ்புக் ஐடி உருவாக்கி 200 பேரை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்குவதாக கூறி ரூ. 2 கோடி வரை வசூல் செய்து மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் வந்துள்ளது. ரஜினிகாந்த் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடிய வகையில் இது இருப்பதாக கூறி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்த விவரங்கள் போலீஸ் விசாரணைக்கு பிறகே தெரிய வரும். ரஜினிகாந்த் பெயரை பயன்படுத்தி எந்த பகுதியில் மோசடி நடைபெற்றது என்பது குறித்தும் பணத்தை இழந்தவர்களிடம் விசாரணை நடத்தி இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க உரிய நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.

