மணிப்பூரில் வாழும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகளுக்கும், தலைநகர் இம்பால் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்குமிடையே பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாகக் கடந்த இரு மாதங்களாக மோதல்போக்கு தொடர்ந்துவருகிறது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் மாநில அரசு திணறிக்கொண்டிருக்கிறது. இந்திய ராணுவம், அசாம் ரைஃபிள்ஸ், மத்திய ஆயுதப் படைகள், மணிப்பூர் காவல்துறையினர் எனப் பல்வேறு தரப்பினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றுவரும்போதும், வன்முறை தொடர்கிறது.

இதுவரை மணிப்பூர் வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கின்றனர், சுமார் 2,000 வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்திருக்கின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், மாநிலத்தில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கும் மாநில, மத்திய அரசுகளால் இயலாது என்ற எண்ணம் மக்களிடம் அதிகரித்துவருகிறது.
அதனால், தற்போது மணிப்பூர் கிராமங்களிலுள்ள வீடுகள், குடும்பங்களைப் பாதுகாக்க அந்தந்தக் கிராம மக்களிடையேயிருந்து ஆயுதமேந்திய தன்னார்வக் குழுக்கள் தலைதூக்கியிருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்தின் எல்லைப் புறங்களிலும் துப்பாக்கிகள், இன்ட்டர்காம்கள் மற்றும் தொலைநோக்கியுடன் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆண்களும் பதுங்கு குழிகளில் வாழத் தொடங்கியிருக்கின்றனர்.

இது குறித்து முன்னாள் ராணுவ வீரர் பாபி சிங் (48) ஊடகங்களிடம் பேசுகையில், “மணிப்பூரின் கிராமத்திலிருந்து என் குடும்பத்தினரை அனுப்பிவிட்டு, எனது கிராமத்தைப் பாதுகாக்கவும், இளைஞர்கள் மற்றும் ஆண்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சி அளிப்பதற்காகவும் நான் மட்டும் இங்கேயே தங்கிவிட்டேன். நம்முடைய உயிரையும் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டும். தீவிரவாதிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும். 18 முதல் 45 வயது வரையுள்ள ஆண்கள் கிராமங்களைப் பாதுகாக்கின்றனர். பெரியவர்கள் ரோந்து செல்கின்றனர். பெண்கள் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டு, தன்னார்வலர்களுக்குச் சமைத்துக் கொடுக்கின்றனர்” எனத் தெரிவித்திருக்கிறார்.

