India oi-Halley Karthik
Published: Tuesday, June 20, 2023, 22:42 [IST]
இம்பால்: மணிப்பூரில் 45 நாட்களை கடந்து வன்முறை நீடித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவை தடையானது வரும் 25 தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தது. இவர்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 53 சதவிகிதமாவார்கள். இந்த வாக்குறுதி பலனளித்தது. பாஜக ஆட்சியை கைப்பற்றியது. அதன் பின்னர் மைத்தேயி/மெய்டெய் மக்கள் பழங்குடி அந்தஸ்து கேட்டு போராட, பழங்குடியினரான குக்கி, நாகா மக்கள் இதற்கு எதிரான போராட்டத்தை தொடங்கினர். இதுதான் கலவரத்திற்கு முக்கிய காரணமாகும். இப்படியாக கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய கலவரமானது தற்போது வரை 105 பேரை பலிவாங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான வீடுகள், நிறுவனங்கள், வாகனங்கள், வழிபாட்டுத்தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. வன்முறையில் பாதிக்கப்பட்ட 47 ஆயிரம் பேர் 372 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வன்முறை மேலும் பரவாமல் தடுக்க 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. சிஆர்பிஎப், அசாம் ரைபிள்ஸ், ராணுவம் என 50 ஆயிரம் பேர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். எனினும், வன்முறை குறைந்தபாடாக இல்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா மே மாதம் 29ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை மணிப்பூர் மாநிலத்திலேயே நான்கு நாட்களாக முகாமிட்டார். மாநில டிஜிபி டோங்கலை நீக்கி விட்டு, அவருக்குப் பதிலாக ராஜீவ்சிங் நியமிக்கப்பட்டார். எனினும் மாநிலத்தில் வன்முறையின் தீவிரம் ஓயவில்லை. அமைதியை நிலை நாட்ட ஆளுநர் ‘அனுசுயா உய்கே’ தலைமையில் ஒரு குழுவை கடந்த 10ம் தேதியன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைத்தார். ஆனால், பிரபல நாடகக் கலைஞர் ரத்தன் தியாம், பிரபல நடிகரும் இயக்குநருமான மகோன்மணி மோங்சபா உள்ளிட்டோர் குழுவிலிருந்து விலகினர். அதேபோல குக்கி சமூகத்தினர், அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்கள் பிரதிநிதிகள் பங்கேற்க மாட்டார்கள் என்று விலகிக்கொண்டது. கலவரம் தொடங்கி ஒன்னறை மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை பிரதமர் நரேந்திர மோடி இது குறித்து எதுவும் பேசவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. மணிப்பூர் கலவரம்.. பிரதமர் மோடி உடனே தலையிட வேண்டும்.. 10 எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் கடந்த ஞாயிற்றுக்கிழமையான 18ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 102வது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, 1975 எமர்ஜென்சி குறித்தும், தற்போதைய பிபர்ஜாய் புயலை எதிர் கொண்டது குறித்தும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், மணிப்பூர் கலவரம் குறித்து எதுவும் பேசவில்லை. எனவே ஆத்திரமடைந்த மக்கள் மன் கீ பாத் நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக கூறி ரேடியோக்களை ரோட்டில் போட்டு உடைத்தனர். பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையானது ஜூன் 25ம் தேதி வரை நீடிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில ஆணையர் ரஞ்சித் சிங் பிறப்பித்துள்ள உத்தரவில், “பிராட்பேண்ட், மொபைல் டேட்டா உள்ளிட்ட அனைத்து வகையான இன்டர்நெட் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதில் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவைக்கு சில விதி விலக்குகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமூக வலைத்தளங்கள் தற்போது நடைபெற்று வரும் கலவரம் தொடர்பான தவறான வதந்திகள் அதிகம் பரப்பப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் இன்டர்நெட் சேவைக்கான தடை ஜூன் 25ம் தேதி மாலை 3 மணி வரை நீடிக்கப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
As the violence continues in Manipur for 45 days, it has been announced that the ban on internet services will be extended till the 25th.
Story first published: Tuesday, June 20, 2023, 22:42 [IST]

