மகளிர் ஆணையத்தின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர் பதவிகளை நிரப்ப புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று, ஜமுனா என்ற பெண் சில மாதங்களுக்கு முன்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு நீதிபதிகள் செந்தில்குமார் மற்றும் கே.ஆர்.ஸ்ரீராம் அடங்கிய அமர்வில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “புதுச்சேரியில் கடந்த 2004-ம் ஆண்டு துவக்கப்பட்ட மகளிர் ஆணையத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கிறது. இதன்மூலம் புதுச்சேரி பெண்களின் உரிமைகள் கேள்விக்குறியாகியிருக்கிறது’ என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதையடுத்து பேசிய நீதிபதிகள், “இந்த வழக்கில் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவை பார்த்தோம். அந்த மனு, காலியாக இருக்கும் பதவிகளை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறையை இழுத்தடிப்பதற்கான முயற்சியாக மட்டுமே தெரிகிறது. கடந்த 2022 பிப்ரவரி 6-ம் தேதி ஆணையத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால் ஜூன் மாதம்தான் விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுவும் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான். தேர்வுக்குழு திருத்த வரைவு எப்போது சட்டத்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டது ? அதன் நிலை என்ன ? என்பது குறித்த விபரங்கள் பதில் மனுவில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்பே தேர்வுக் குழுவை அமைக்காதது ஏன்? இது புதுச்சேரி அரசு மகளிர் மட்டும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் திறமையின்மையையே காட்டுகிறது.

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💚💚💚💚💚💚💚❤️❤️❤️❤️😄😄❤️❤️