டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு பல ஆண்டுகளாக இருந்துவருகிறது. அதையொட்டி, டெல்லி மாநிலத்தின் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்தது. அதில், ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பெரும்பான்மை பலம் கொண்ட அரசு டெல்லியில் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அரசை நடத்துவதற்கான அனைத்து அதிகாரமும் இருக்கிறது’ என்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மே 11-ம் தேதி வழங்கியது.

தமிழ்நாடு உள்ளிட்ட பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமான மத்திய அரசு குடைச்சல் கொடுத்துவருவதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகின்றன. டெல்லியும் அதில் முக்கியமானது. அங்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 2015-ம் ஆண்டு அமைந்ததிலிருந்தே, மாநில அரசுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையே மோதல் நடந்துவருகிறது. மத்திய அரசின் தலையீடு காரணமாக, டெல்லி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துகொடுக்க முடியவில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டிவந்தார்.
டெல்லி பிரதேச அரசின் அதிகாரங்களைக் குறைத்து, துணை நிலை ஆளுநரின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கான சட்டத்திருத்தம் ஒன்றை 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்தது. அப்போது, துணை நிலை ஆளுநராக அணில் பைஜால் என்பவர் இருந்தார். ‘தேசியத் தலைநகர் பிரதேச டெல்லி அரசு சட்டத்திருத்தம் 2021’ என்று கொண்டுவரப்பட்ட அந்த சட்டத்திருத்தம், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக்கப்பட்டது. அந்தச் சட்டத்தின் மூலம், டெல்லி சட்டமன்றத்துக்கு இருக்கும் அதிகாரத்தைக் காட்டிலும், அதிக அதிகாரம் துணை நிலை ஆளுநருக்கு வழங்கப்பட்டது.

இத்தகைய சூழலில், ‘டெல்லி பிரதேசத்தின் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்குத்தான் உண்டு. அதை உறுதிசெய்ய வேண்டும்’ என்று கோரி ஆம் ஆத்மி அரசு தொடர்ந்திருந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, கடந்த ஆண்டு மே 6-ம் தேதி உத்தரவிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, “நிர்வாக சேவைகள் தொடர்பான அதிகாரம் டெல்லி அரசிடமே இருக்க வேண்டும். அதற்கு, துணை நிலை ஆளுநர் கட்டுப்பட வேண்டும்” என்று கடந்த மே 11-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன் மூலமாக, சட்டம் ஒழுங்கு, நிலம் ஆகிய இரண்டைத் தவிர மற்ற அனைத்து சேவைகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உண்டு என்பதை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது .
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் காட்டிலும் தாங்கள் மேலானவர்கள், அதிகாரமிக்கவர்கள் என்று கருதிக்கொண்டு செயல்பட்டுவரும் ஆளுநர்களின் தலையில் குட்டுவைப்பதாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது. அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாள்களில் உச்ச நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை விடப்பட்டது. அப்போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செல்லாததாக்கும் வகையில், மத்திய பா.ஜ.க அரசு மே 19-ம் தேதி இரவு 10 மணிக்கு அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதன் மூலம் அரசு அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லாத நிலை ஏற்படும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
எனவே, மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிராக எதிர்க் கட்சிகளின் ஆதரவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திரட்டிவருகிறார். அந்த வகையில், சென்னைக்கு ஜூன் 1-ம் தேதி வருகை தந்த கெஜ்ரிவால், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ஆதரவு கோரினார். இந்த அவசரச் சட்டத்தை வரும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது. மக்களவையில் பா.ஜ.க-வுக்கு பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில், 238 உறுப்பினர்களில் 93 உறுப்பினர்களின் ஆதரவே பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. ஆகையால், பா.ஜ.க அல்லாத அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்தால், அவசரச் சட்டத்தைத் தோற்கடிக்க முடியும்.
எனவேதான், பா.ஜ.க அல்லாத கட்சிகளின் ஆதரவை கெஜ்ரிவால் கோரிவருகிறார். இதில், முக்கிய எதிர்க் கட்சியான காங்கிரஸின் ஆதரவு கெஜ்ரிவாலுக்கு கிடைக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாக எழுந்திருக்கிறது. பல்வேறு கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துவரும் கெஜ்ரிவால், இது தொடர்பாக பேசுவதற்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோரைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில், அவசரச் சட்டம் விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் அணில் சௌத்ரி, “கெஜ்ரிவாலை சந்திப்பதா இல்லையா என்பது பற்றி காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும். அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றுசேர்ந்திருந்தபோது, கெஜ்ரிவால் மட்டும் பா.ஜ.க-வை பாராட்டிக்கொண்டிருந்தார். கெஜ்ரிவால் தனது தவறை உணர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
பா.ஜ.க-வின் ‘பீ டீம்’ போல ஆம் ஆத்மி செயல்பட்டுவருகிறது என்றும், அந்தக் கட்சிக்கு அளிக்கும் ஆதரவு பா.ஜ.க-வுக்கு அளிக்கும் ஆதரவு போன்றது என்றும் காங்கிரஸ் நிர்வாகிகளில் பலர் கருதுகிறார்கள். மேலும் டெல்லி மாநில அரசியலை பொறுத்தவரை ஆம் ஆத்மி, காங்கிரஸ் இன்னும் எதிர் எதிர் துருவங்கள் தான். அதுமட்டுமின்று குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் வரவே காங்கிரஸ் தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக சொல்லப்பட்டது. என்றாலும் தி.மு.க உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருப்பதால், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசின் அவசரச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவே வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

