ஜெய்ப்பூர்: நாட்டில் பாஜ., ஏன் வெறுப்பை பரப்புகிறது?. வெறுப்பை பரப்ப காரணம் வேலையின்மை மற்றும் பணவீக்கம் என ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்.,எம்.பி ராகுல் பேசினார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நாட்டின் ‘எக்ஸ்ரே’. அதனால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மிகவும் அவசியம்.பழங்குடியினரின் உரிமைகளை காங்கிரஸ் பாதுகாக்கும்.
பிரதமர் மோடி தன்னை ஓபிசி என்று கூறுகிறார். ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி நான் பேசும்போது, இந்தியாவில் ஒரே ஜாதிதான் இருக்கிறது. நாட்டில் ஏழைகள் மட்டுமே ஜாதி என்று மோடி கூறுகிறார். ஆனால் கோடீஸ்வரர்கள் என்று இன்னொரு ஜாதி இருக்கிறது. அதில் அம்பானி, அதானி உள்ளனர். மக்கள் கவனத்தை திசை திருப்புவது பாஜ.,வின் வேலை.
நாட்டில் பாஜ., ஏன் வெறுப்பை பரப்புகிறது?. நான் உங்களுக்கு இரண்டு விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். வெறுப்பை பரப்ப காரணம் வேலையின்மை மற்றும் பணவீக்கம். இந்த இரண்டு விஷயங்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பாஜ., வெறுப்பை பரப்புகிறது.
இந்தியாவின் செல்வம் கோடீஸ்வரர்களின் கைகளிலேயே இருக்க வேண்டும். தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அதைப் பற்றி கேள்வி எழுப்பக்கூடாது என்றும் பாஜ., விரும்புகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.

