ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் டெல்லியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் மோதல்போக்கே நிலவுகிறது. இதன் தொடர்ச்சியாக அரசு நிர்வாக அதிகாரம் தொடர்பாக கடந்த மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சத்திரசூட் தலைமையிலான அமர்வு, `டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லையென்றாலும்கூட சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது. ஜனநாயக நாட்டில் துணைநிலை ஆளுநரைவிட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் இருக்க வேண்டும். எனவே, பொது ஒழுங்கு, காவல்துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர குடிமைப் பணி அதிகாரிகளைக் கட்டுப்படுத்துவது உட்பட மற்ற அனைத்து அதிகாரங்களும் டெல்லி அரசுக்கு உண்டு’ எனத் தீர்ப்பளித்தது.
ஆனால், இந்தத் தீர்ப்பு வெளியான அடுத்த நாளே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தேசிய தலைநகர குடிமைப் பணி ஆணையத்தை (NCCSA) உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார். மத்திய அரசுக்குச் சாதகமான இந்த அவசரச் சட்டத்தில், குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாறுதல் விவகாரத்தில் துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

