இதற்கு நடுவே, செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை எனக் கோரியும் செந்தில் பாலாஜியை ஆஜர்படுத்தக்கோரும் ஆட் கொணர்வு மனுவும் அவரது மனைவி பெயரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பான விசாரணைகள் நீதிமன்றத்தில் இருக்கும் போதே செந்தில் பாலாஜி தொடர்புடைய மேலும் சில இடங்களிலும் அவர்கள் நண்பர்கள் சிலரது வீடுகளிலும் அதிரடி சோதனைகளை நடத்தி ஆவணங்களை அள்ளியது அமலாக்கத்துறை. இதற்கு நடுவே, சிகிச்சையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக, “செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சரியான நடவடிக்கையே” என தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத்துறைக்கு அனுமதியளித்தது.
ஒரு பக்கம் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் உள்ளிட்ட அவரது உறவினர்களுக்கு சம்மன் அளித்த அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜியையும் விசாரணை வளையத்துக்குள் உட்கார வைத்தது. ஆனால் 5 நாள் விசாரணையின் போது, பெரும்பாலான கேள்விகளுக்கு, தனக்கு எதுவும் தெரியாது என்ற பதிலே செந்தில் பாலாஜியிடம் இருந்து வந்தது. இதனால், விசாரணையை முடித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய அமலாக்கத்துறை, “செந்தில் பாலாஜி தங்களின் விசாரணைக்கு ஒத்துழைக்க வில்லை” என்ற தகவலையும் நீதிமன்றத்தில் பதிவு செய்தது.
செந்தில் பாலாஜியை கண்காணிப்பு வளையத்துக்குள் வைத்துக்கொண்டே அவரது தம்பி அசோக்கை வளைக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்திக்கொண்டே இருக்கிறது அமலாக்கத்துறை. செந்தில் பாலாஜிக்கு எல்லாமுமாக இருக்கும் அசோக் அமலாக்கத்துறையின் கையில் சிக்கினால், இதுவரை கட்டிக்காக்கப்பட்ட விஷயங்கள் வெளியே வந்துவிடும் என ஆட்சி மேலிடமும் அஞ்சுவதாகச் சொல்கிறார்கள். அதனால், முடிந்தவரைக்கும் அவரை தொடபு எல்லைக்கு வெளியிலேயே வைத்திருக்க உத்தரவாம்.
அமலாக்கத்துறையின் கையில் சிக்காவிட்டாலும் தனக்கு வேண்டப்பட்ட நபர்களிடம் தொடர்புகொண்டபடி தான் இருக்கிறாராம் அசோக். அண்மையில் அந்த தொடர்பு தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு விட்டுப் போனதாம். இதையடுத்து, அமலாக்கத்துறை ஆளைத் தூக்கிவிட்டதோ என்ற சந்தேகம் செந்தில் பாலாஜி தரப்புக்கு வந்துவிட்டதாம். இதை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, அசோக்கை அமலாக்கத்துறை கைது செய்துவிட்டது என்ற செய்தியை பாலாஜி தரப்பிலிருந்தே பக்குவமாய் பரப்பினார்களாம். இதில் போலீஸின் பங்கும் உண்டு என்கிறார்கள்.
பாலாஜி தரப்பில் எதிர்பார்த்தது போலவே அசோக் கைது செய்தி பரபரப்பானது. ஆனால், ஒரு நாள் முழுக்க இந்த செய்தியை ஓடவிட்டு வேடிக்கை பார்த்த அமலாக்கத்துறை ஒருநாள் கழித்து, ‘அசோக்குமாரை நாங்கள் கைதுசெய்யவில்லை’ என தாமாக முன்வந்து அறிக்கை கொடுத்தது. இந்தச் செய்தியை அமலாக்கத்துறை வாயிலிருந்தே வரவைப்பதற்காகவே பாலாஜி தரப்பு ‘ அசோக் கைது’ என்ற வதந்தியை பரப்பியதாம்.

