அமெரிக்கா ‘எம்.க்யூ 9 பிரிடேட்டர்’ என்ற அதிநவீன ட்ரோன்களை தயாரித்து வருகிறது. இதை வானில் மிக அதிக உயரத்தில் இயக்கி கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். மேலும் எதிரிகளின் இலக்குகளை மிகவும் துல்லியமாக தாக்கி அளிக்க முடியும். தற்போது இந்தவகை ட்ரோன்களை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இதற்கிடையில் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், அதை சமாளிக்கும் வகையில் ‘எம்.க்யூ 9 பிரிடேட்டர்’ வகை ட்ரோன்களை வாங்குவதற்கு இந்தியா நீண்ட காலமாக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் உள்நாட்டு தயாரிப்புகளையே பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு முன்னதாக எடுத்திருந்தால், இந்த முடிவு கிடப்பிலேயே வைக்கப்பட்டிருந்தது.
மேலும் மத்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) முப்படைகளும் பயன்படுத்தும் வகையிலான ட்ரோன்களை தயாரித்து வருகிறது. இதற்கிடையில் டெல்லியில் ராணுவ அமைச்சகத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ தளவாடங்களை கொள்முதல் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஜெனரல் அட்டாமிக்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் எம்.க்யூ- 9 பிரிடேட்டர் வகை ட்ரோன்களை ரூ.24,000 கோடிக்கு வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மற்ற விவரங்களை கவுன்சிலின் வரையறைக்குழு கூடி விரைவில் முடிவு எடுக்கும். பின்னர் பாதுகாப்பு விவரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு நடவடிக்கை எடுக்கும். இந்த ஒப்பந்தத்தின் படி கடற்படைக்கு அதிகபட்சமாக 15 ட்ரோன்களும் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா 8-ம் வழங்கப்படும்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது அமெரிக்க அரசின் வெளிநாட்டு ராணுவ தளவாட விற்பனை திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. சீனா பாகிஸ்தானுக்கு ஆயுதம் தாங்கிய Cai Hong-4 மற்றும் Wing Loong-II ட்ரோன்களை வழங்குகிறது.

எனவே தான் இந்த முடிவு அவசரமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். சில நேட்டோ நாடுகளும், அமெரிக்காவின் நெருங்கிய ராணுவ நட்பு கொண்ட நாடுகளும் மட்டுமே இந்தவகை ட்ரோன்களை வைத்திருக்கின்றன. இத்தகைய ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்கள், ஆளில்லா போர் விமானங்கள் போன்று தான் செயல்படும்.
அடுத்தத் பணிக்காக மீண்டும் ஆயுதம் ஏவுவதற்கு, மீண்டும் சொந்த தளங்களுக்குத் திரும்புவதற்கு முன், எதிரி இலக்குகள் மீது ஏவுகணைகள் மற்றும் துல்லியமான இலக்குகளை சுடும் திறன் கொண்டவை. இந்திய கடற்படையானது 2020-ம் ஆண்டு செப்டம்பர் முதல் குத்தகைக்கு இந்தவகையிலான 2 ட்ரோன்களை எடுத்து கண்காணிப்பு பணியில் பயன்படுத்தி வருகிறது. அதிகபட்சமாக 5,500 கடல் மைல்கள் வரை செல்லக்கூடிய மற்றும் 40,000 அடி உயரத்தில் பறக்கக்கூடிய தன்மை கொண்டது.

கிழக்கு லடாக்கில் தொடரும் ராணுவ மோதலுக்கு மத்தியில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சீன ராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க திறம்பட பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டில் தேஜாஸ் மார்க்ர்-2 போர் விமானங்களை இயக்குவதற்கு GE-F414 டர்போர்ன் என்ஜின்களை இணைந்து தயாரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் மற்றும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் இடையேயான ஒப்பந்தமும் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.
அமெரிக்காவுடனான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு COMCASA (தொடர்புகள், இணக்கம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடு) கையெழுத்தானது. 2020-ம் ஆண்டு கையெழுத்தான புவிசார் ஒத்துழைப்புக்கான அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (BECA) ஆகியவை இந்தியாவுக்கு அதிக அணுகலைப் பெற வழி வகுத்துள்ளன.

MQ-9B ட்ரோன்களில் அதிநவீன ஏவியோனிக்ஸ் மற்றும் தரைக் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன், COMCASA-வின் பாதுகாக்கப்பட்ட குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (GPS), ஐடென்டிஃபிகேஷன் ஃபிரண்ட் ரிசீவர் மற்றும் விஎச்எப் சிஸ்டம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. இது எதிரிகள் ஏமாற்றி தாக்குவதை எளிதாக எதிர்கொள்ளும் திறன் கொண்டவை.
அமெரிக்கா கடந்த 2007-ம் ஆண்டு முதல் $21 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்களை ஏற்கனவே பெற்றுள்ளது. இந்தியா C-17 – Globemaster-III விமானங்கள், C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானங்கள், M-777 அல்ட்ராட் லைட் ஹோவிட்சர்கள் போன்றவற்றை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

