கவச் சோதனை!
முதல்முதலாக தென் மத்திய ரயில்வேயின் லிங்கம்பள்ளி-விகாராபாத்-வாடி மற்றும் விகாராபாத்-பிதார் பிரிவுகளில் 250 கிலோமீட்டர் தூரம் வரை கவாச் சோதனை நடத்தப்பட்டன. இந்த சோதனை வெற்றிபெற்றதையடுத்து, இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதிலும் கவச் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த மூன்று நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் முதற்கட்டமாக கவச் தொழில்நுட்பத்தை உருவாக்க ரூ.16.88 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி 2024, மார்ச்சுக்குள் புது டெல்லி-ஹவுரா மற்றும் புது டெல்லி-மும்பை இடையே கவச் தொழில்நுட்பம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டது. இதனுடைய செயல்பாட்டின் அடிப்படையிலேயே அடுத்தடுத்து கவச் தொழில்நுட்பத்தை நீட்டிக்கவும் முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது எதிர்பாராத விதமாக ஒடிசாவில் இத்தகைய ரயில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிசா ரயில் விபத்து தவிர்க்கப்பட்டிருக்குமா?!
விபத்து நடந்த பகுதியில் கவச் தொழில்நுட்பம் இல்லையென்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய பிறகு, கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், உண்மையில் கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தாலும் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது என்று கூறுவது ஒரு யூகம் மட்டுமே என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏனெனில், விபத்துக்கான காரணம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நேருக்கு நேர் ரயில்கள் வரும் போது கவச் உதவும். ஆனால் இந்த விபத்தில் ஒரே ட்ராக்கில் தான் ரயில்கள் வந்ததாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. தடம் புரண்ட ரயில் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருந்தால் கவச் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு இதில் பயன்பட்டிருக்கும் என்பது கேள்வியே என்கிறார்கள் வல்லுநர்கள்!

