சென்னை செங்குன்றம், திருச்சி உறையூர் ஆகிய பதிவுத்துறை அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.`3,000 கோடிக்கு’ செய்யப்பட்ட பரிவர்த்தனை மறைக்கப்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது. இந்தச் சோதனை நடந்துகொண்டிருந்தபோதே சார் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதும் பரபரபாகியிருக்கிறது.
தமிழகத்தில் 583 பதிவாளர் அலுவலங்கள் இருக்கின்றன. இந்த அலுவலங்களில் பல புகார்கள் எழுந்த நிலையில்தான் இந்த இரண்டு அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஒருபக்கம், இந்தச் சோதனை நடந்துகொண்டிருக்கும்போதே 36 மாவட்டப் பதிவாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
`ஏன் இந்த சோதனை?’
வருமான வரிச் சட்டம் பிரிவு 285 BA மற்றும் விதி 114 E-ன்படி ஒவ்வொரு நிதியாண்டு முடியும்போதும் ரூ.30 லட்சத்துக்கு அதிகமாக மேற்கொண்ட விற்பனை விவரங்களான, விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். ஒவ்வோர் ஆண்டிலும் இந்த விவரங்கள் தவறாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பதிவுத்துறை அலுவலங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
ஆனால், தமிழகத்திலுள்ள அனைத்துப் பதிவு அலுவலகங்களும் இது பின்பற்றியிருக்கும் நிலையில், திருச்சி பதிவு மாவட்டம் உறையூர் சார் பதிவாளர் அலுவலகம், திருவள்ளூர் பதிவு மாவட்டம் ரெட்ஹில்ஸ் சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கு வருமான வரித்துறையினர் நேரில் வந்து ஆய்வைத் தொடங்கினர்.
2017-2018-ம் நிதி ஆண்டிலிருந்து பதிவுசெய்யப்பட்ட ஆவணங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத இந்த இரு அலுவலகங்களின் சார் பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இடமாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
பதிவுத்துறை விளக்கம் என்ன?
இது குறித்து பதிவுத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `ஆவணதாரர்களின் விவரங்கள் பதிவுசெய்ய ’ஸ்டார் 2.0’ என்னும் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்கள் பதிவுக்கு வரும் நிலையில், விற்பவர் மற்றும் வாங்குபவரிடமிருந்து பான்(PAN) எண் பெறப்படும். பான் எண் இல்லாதவர்கள் வருமானவரி சட்டத்தின்படி படிவம்: 60 அளிக்க வேண்டும். மேலும், ரூ.30 லட்சத்துக்கு மேற்பட்ட விற்பனை ஆவணங்களைப் பொறுத்து விற்பவர், வாங்குபவர், ஆதார் எண், PAN எண், சொத்தின் தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற கூடுதல் விவரங்கள் ஸ்டார் 2.0 மென்பொருள் வழி சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் அந்த நிதியாண்டு முடிவடைந்ததும் வருமான வரித்துறை இணைய தளத்தில் சார்- பதிவாளரால் பதிவேற்றம் செய்யப்படும்.
மேலும், பதிவுப் பணிகள் மேற்கொள்ளும்போது விற்பனை செய்பவர் மற்றும் சொத்தை வாங்குபவர்களின் ஆதார் எண் பெறப்பட்டு, அதை நிகழ்நேரத்தில் (Real Time), UIDAI ஆதார் தரவுடன் ஸ்டார் 2.0 மென்பொருள் மூலமாக சரிபார்க்கப்படுகிறது. ஆதார் எண்ணுடன் PAN எண் இணைக்கப்பட்டிருப்பதால், பதிவு தொடர்பான தகவல்கள் அனைத்தும் வருமான வரித்துறைக்கு வழங்கும் வகையில் பதிவுத்துறை மென்பொருள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
உரிய காலத்துக்குள் இந்த விவரங்களைப் பதிவேற்றம் செய்யாத இந்த இரு அலுவலகங்களின் சார் பதிவாளர்கள்மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார் பதிவாளர்களும் 61A விவரங்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தில் உரிய காலத்துக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன’ எனக் கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து பேசிய பதிவாளர்கள் சிலர், “ஏற்கெனவே, பதிவாளர்களுக்கு அலுவலகத்துக்குள்ளே பல வேலைகள் இருக்கின்றன. அதோடு சேர்த்துதான் இந்தப் பதிவேற்றத்தையும் செய்ய முடியும். கடந்த ஆறு மாதங்களுக்கு மட்டும்தான் இந்த விவரங்கள் பதிவேற்றம் செய்யவில்லை. இதை எப்படி மறைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். அவை முறைப்படி பதிவு செய்யப்பட்டவைதான். ஆனால், அரசு மென்பொருளில் விவரங்கள் இணைக்கப்படவில்லை. இதை முறைகேடு என்றோ, ஊழல் என்றோ சொல்ல முடியாது. இந்த இரு அலுவலகங்களில் மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாகத்தான் ஆறு மாத விவரம் பதிவேற்றம் செய்யவில்லை. இருப்பினும், வருமான வரித்துறை சோதனைக்கு ஒத்துழைப்பு தருகிறோம்” என்கிறார்கள்.
`கடுமையான தண்டனை வேண்டும்!’
இது குறித்து சமூக ஆர்வலரும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்தவருமான ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ”இன்னும் வருமான வரித்துறை சோதனை நிறைவடையவில்லை. ஆனால், இந்த இரண்டு அலுவலகங்கள் மட்டுமே இதைச் செய்திருக்கும் எனச் சொல்வதை நம்ப முடியாது. இது நிச்சயம் மற்ற அலுவலகங்களிலும் நடந்திருக்கும் என்பது உறுதி. காரணம், அனைத்துப் பதிவு அலுவலகங்களும் லஞ்சம் புரையோடிப்போனதாகத்தான் இருக்கிறது.
விவரங்கள் தெரிவிக்காமல் வெளிப்படைத்தன்மை இல்லாத அலுவலகங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும். மேலும், தவறு செய்பவர்களை இடமாற்றம் செய்தால் மட்டும் போதாது. அவர்கள் செய்த தவற்றுக்குத் தண்டனை தர வேண்டும். தவறு செய்த ஓர் உயர்மட்ட அதிகாரியை வேலையிலிருந்து நீக்கினால் மட்டுமே கடைமட்ட ஊழியர்களுக்கு அச்சம் இருக்கும்.
அதனால் நடக்கவிருக்கும் தவறுகளும் குறையும். தமிழகம் முழுவதிலும் பதிவாளர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, அரசு நிலங்களைப் பட்டா போட்டு விற்ற எண்ணற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவை எப்போது விசாரிக்கப்படும். போலியான பதிவுகளைக் கண்டறிந்து அதை ரத்துசெய்யும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்த வேண்டும்” என்றார்.

இது வருமான வரித்துறை ‘சோதனை அல்ல’
இது குறித்து நம்மிடம் பேசிய அரசு அதிகாரிகள் சிலர், “இந்த இரு அலுவலர்கள் அலட்சியமாகச் செயல்பட்டதால் விவரங்கள் பதிவேற்றம் செய்யாமல் இருந்தது தெரியவந்திருக்கிறது. பிற அலுவலகங்களிலும் பதிவேற்றம் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்த அலுவலகங்கள் பதிவேற்றம் செய்யாமல் இருப்பதையும், அந்த விவரங்களை வருமான வரித்துறையினர் கேட்ட விதமும் இந்த முறை வித்தியாசமாக இருக்கிறது. பதிவு அலுவலகங்கள் தகவல் பதிவேற்றம் செய்ததில் எதுவும் விடுபட்டிருந்தாலும், வருமான வரித்துறை ’நோட்டீஸ்’, ’சம்மன்’ அனுப்புவார்கள். இல்லையென்றால், பதிவுத்துறைக்கு விவரங்கள் அனுப்பாத அலுவலகம் குறித்த தகவலைக் கடிதத்தின் வாயிலாக தெரிவித்தால், பின்பு அது மாவட்ட அலுவலகத்துக்குத் தெரியப்படுத்தி பதிவேற்றம் செய்யப்படும்.
அதையும் மீறி பதிவு அலுவலகம் பதிவேற்றம் செய்யாமல் இருந்தால், ஒரு நாளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கலாம். இப்படியாக விவரங்கள் பெற வழிமுறைகள் இருந்தும், நேரடியாக வந்து சோதனை போன்ற ஒரு தோற்றத்தை வருமான வரித்துறை கடந்த காலங்களில் கொடுத்ததில்லை. ஒருவர் மட்டும் வந்தும் கூட விவரங்களைப் பெற்றிருக்கலாம், ஆனால் 10 பேர், ஆயுதம் ஏந்திய அதிகாரிகளுடன் வந்து விவரங்களைப் பெற வேண்டியதற்கான தேவை என்ன என்பது தெரியவில்லை” என்றனர்.

இரு துறைகளின் ‘தகவல் பரிமாற்றமே’!
இது குறித்து வணிகவரி மற்றும் பதிவுத்துறைச் செயலாளர் ஜோதி நிர்மலா சாமி, “இது இரு துறைகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றம்தான். ரூ.30 லட்சத்துக்கு அதிகமாக நடக்கும் பரிவர்த்தனையின் விவரங்கள் அனுப்பப்படும். ’ரெட்ஹில்ஸ்’ அலுவலகம் எதையும் பதிவேற்றம் செய்யவில்லை. உறையூரில் பாதி பதிவேற்றம் முடிந்திருக்கிறது. இத்தனை நாள்களாக ’யாரெல்லாம் பதிவேற்றம் செய்யவில்லை’ என்பது ரிப்போட்டாக அனுப்பப்பட்டதில்லை. எப்போதெல்லாம் வருமான வரித்துறை விவரம் கேட்கிறார்களோ, அப்போது பதிவு அலுவலகங்கள் அனுப்பிவிடுவார்கள். ஆனால், இது புதிய முறையாக நேரடியாக வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்கிறது. ஆனால், எந்தத் தகவல் வேண்டுமென கேட்டாலும் வெளிப்படையாகச் செயல்பட்டு வரும் பதிவு அலுவலகங்கள் கொடுக்கத் தயாராகயிருக்கிறது. இந்தத் தகவலைச் சரியாகப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட பதிவு அலுவலங்களிலும் உத்தரவிட்டிருக்கிறோம்” என்றார்.
”தமிழகத்தில் இந்த இரண்டு அலுவலங்களைத் தாண்டி, பல அலுவலகங்கள் கணக்கு விவரங்களை முறையாகப் பதிவேற்றம் செய்யாமல் இருக்கின்றனர். ’வருமான வரித்துறை சோதனை’ என்னும் பெயரில் இந்த விவரங்கள் சேகரிக்கப்படும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

