Last Updated:
Elephant hospital vantara | யானைகள் உடலளவில் மிகவும் பெரிதாக இருப்பதால் அவைகள் உடல்நலம் குன்றிய போது தூக்கி செல்வதற்காக பிரத்யேக கிரேன் அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்திற்கு மூன்று நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை, ஜாம்நகரில் உள்ள வந்தாரா விலங்கு மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். குஜராத்தில் உள்ள வந்தாராவிற்கு இந்த பயணத்தின் போது, உலகின் மிகப்பெரியது என்று கூறப்படும் அதிநவீன யானை மருத்துவமனையையும் அவர் பார்வையிட்டார்.
வந்தாராவில் உலகின் மிகப்பெரிய யானைகள் மருத்துவமனையை ராதே கிருஷ்ணா கோயில் யானைகள் நல அறக்கட்டளை (RKTEWT) நிறுவியுள்ளது. 3 யானைகளுக்கு ஒரே நேரத்தில் தீவிர சிகிச்சை அளிக்க வசதியாக அதிநவீன வசதிகளுடன் கூடிய மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்ட நேர அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் வகையில், சிறப்பு ரப்பர் தரையுடன் கூடிய 2 ஆபரேஷன் ஏரியாக்களை மருத்துவமனை கொண்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவமனை முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. யானையை தரையில் இருந்து 4 அடி உயரம் வரை தூக்க கூடிய ஹைட்ராலிக் பிளாட்பார்ம் அறுவை சிகிச்சை அறையில் உள்ளது. இதன் மூலம் யானைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்கிறது.
மருத்துவமனையின் சிறப்பம்சமே யானையை எந்த மூலைக்கும் நகர்த்தக்கூடிய ஓவர்ஹெட் கிரேன் ஆகும். காலில் பிரச்சனை உள்ள யானைகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். யானைகளுக்கு பாசிட்டிவ் ரீஇன்போர்சேயின்மென்ட் முறையில் பயிற்சி அளிக்கவும் வசதிகள் உள்ளன.
இங்கு 2 போர்ட்டபிள் ஹைட்ராலிக் பிளாட்பார்ம்களும் உள்ளன. இதன் மூலம் யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர்கள் 6 அடி உயரம் வரை செல்ல முடியும். லேசர் சிகிச்சை, தெர்மல் கேமரா, டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களும் இங்கு உள்ளன.
மருத்துவமனையில் உள்ள வீடியோ கான்பரன்சிங் வசதி மூலம் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களுடன் இணைந்து கலந்தாலோசிக்க முடியும். மருத்துவர்கள், பயோலொஜிஸ்ட்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200 பேர் அமரக்கூடிய ஆடிட்டோரியமும் இங்கு உள்ளது. பயிற்சி வகுப்புகள் மற்றும் நேரடி அறுவை சிகிச்சை காட்சிகளை காண்பிக்க இது உதவும்.
March 02, 2025 2:05 PM IST

