கிளம்பிய எதிர்ப்பு – நடந்த மாநாடு:
தமிழ்நாடு முழுவதும் மாநாட்டுக்காக இடம் பார்த்திருந்தது விஜய் தரப்பு. எல்லா இடங்களிலும் எதோ ஒரு காரணத்தைச் சொல்லி இடம் வழங்க மறுத்தனர். போலீஸ் அனுமதி கொடுப்பதிலும் சிக்கல் இருந்ததாகத் தெரிகிறது. இதனால் செப்டம்பரில் தேதி குறிக்கப்பட்ட மாநாடு அக்டோபரில் நடந்தது. ஆகஸ்ட்டில் கட்சிக் கொடியை மட்டுமே விஜய் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போதும் கூட பெரிதாக எதைப்பற்றியும் பேசவில்லை. கட்சிக் கொடிக்கான விளக்கத்தை கூட மாநாட்டில்தான் அறிவிப்பேன் என்றார்.
எதிர்பார்ப்பை கிளப்பிய அந்த மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது. 4-5 லட்சம் தொண்டர்களைத் திரட்ட வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. எதிர்பார்த்த கூட்டத்தைத் திரட்டவும் செய்தனர். தமிழக அரசியல் வரலாற்றில் மிகக்குறுகிய நேரத்தில் நடந்து முடிந்த மாநாடு அதுவாகத்தான் இருக்கும். கூட்டம் அதிகம் இருப்பதால் விரைவில் மாநாட்டை முடிக்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டதால் 2 மணி நேரத்திலேயே மாநாடு முடிக்கப்பட்டது. விஜய் 48 நிமிடங்களுக்கு உரையாற்றியிருந்தார். ஊழல் கபடதாரிகள் நம்முடைய அரசியல் எதிரி. பிளவுவாத சக்திகள் நம்முடைய கொள்கை எதிரி என்றதோடு திமுகவை கூடுதலாக அடித்தார்.
‘திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள்’:
‘அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா..’ ‘திராவிட மாடல்னு சொல்லிட்டு ஒரு குடும்பம் சுயநலமா தமிழகத்தை கொள்ளையடிச்சுக்கிட்டு இருக்கு..’ என திமுகவை ஒரே அடியாக அடித்தார். மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் திமுகதான் பிரதான எதிரி என தனக்கான அரசியல் லைனை பிடித்தார். பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் என ஐவரைத் தன்னுடய கொள்கைத் தலைவராகவும் அறிவித்தார். எல்லாவற்றுக்கும் மேல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என விசிகவின் கோரிக்கையை தொட்டு திமுக கூட்டணிக்குள் கல்லடிக்க முயன்றார் விஜய். ஆனால், திருமாவை வைத்தே விஜய்க்கு பதில் அறிக்கை விட வைத்து திமுகவும் பதிலடி கொடுத்தது
விஜய்யின் நேரடி அட்டாக்குகளால் திமுகவும் விஜய்யை அடிக்க ஆரம்பித்தது. ‘நாங்கெல்லாம் எம்.ஜி.ஆரையே பார்த்தவங்க..’ என திமுக ஐ.டி.விங் ரவுண்ட் கட்டியது. ‘நேத்து வந்தவெல்லாம் திமுகவ அழிக்கனும். முதலமைச்சர் ஆகணும்னு நினைக்கிறான்.’ என ஸ்டாலினே மறைமுகமாக விஜய்யை சாடினார். பெரியாரை கொள்கைத் தலைவராக அறிவித்ததில் பா.ஜ.க கடுப்பானது. ‘திராவிடமும் தமிழ்த் தேசியமும் இரு கண்கள்’ என விஜய் பேசியதில் அண்ணன் – தம்பி உறவையே அறுத்துப் போட்டார் சீமான். அதன்பிறகு எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதும் சமூக வலைதளங்களில் வைரலானது.
