அடுத்த மாதம் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் விசிக தலைவரும், எம்.பி-யுமான திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அறிவித்தார். அதைத் தொடர்ந்து அரசியல் அரங்கில் பல்வேறு சலசலப்புகள் எழுந்தன. குறிப்பாக அதிமுக-வை மாநாட்டுக்கு அழைத்தது விவாதமானது. அதன் பிறகு அதற்கு திருமாவளவன், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் விளக்கமளித்திருந்தனர். இதற்கிடையில்தான் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திருமாவளவன் பேசிய வீடியோ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டு, சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. ஆனால், அந்த வீடியோ தொடர்பான செய்திகள் வெளியாகி மீண்டும் அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில், “உணர்வுப் பூர்வமான பிரச்னையில் கை வைத்துள்ளோம். இது மற்ற மாநாடுகளைப் போல இது சாதாரண மாநாடு என்று நினைத்துவிடக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் மது வேண்டாம் என்பார்கள். அதேசமயம் மதுவை ஒழிக்க விடாமல் பார்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளும் நடக்கும். தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் இது தான் நிலைமை. எந்த கட்சியைக் கேட்டாலும், மது தவறானது, மதுவை ஒழிக்க வேண்டும் எனக் கூறுவார்கள். ஒரு கட்சிகூட மதுக் கடைகள் இருப்பதால் என்ன தவறு என்று சொல்ல வாய்ப்பே இல்லை. எல்லாக் கட்சிகளும் மது வேண்டாம்.
