குமரியில் காங்கிரஸ் கட்சி அலுவலக திறப்பு விழா
கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சிக்கு சொந்தமாக கட்டப்பட்ட அலுவலக திறப்புவிழாவில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கலந்துகொண்டார். இதில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் பினுலால் சிங், எம்.பி-க்கள் விஜய்வசந்த், ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ-க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தாரகை கத்பர்ட், ரூபி மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திறப்பு விழாவுக்குப் பின் செய்தியாளர்களிடம் செல்வபெருந்தகை கூறுகையில், “எங்களுக்கு புதிய கல்விக்கொள்கையில் உடன்பாடு கிடையாது. கல்வி என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பொதுப்பட்டியலில் உள்ளது. மாநில அரசிடம் கலந்து பேசாமல் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நவோதயா பள்ளியை ராஜிவ்காந்தி கொண்டுவந்தார். மும்மொழி கொள்கை இருப்பதால் அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என தமிழகம் சொன்னது. அப்போது பிரதமர் ராஜிவ் காந்தியோ, காங்கிரஸ் கட்சியோ கல்வி தொகையை கொடுக்கமாட்டோம் எனச்சொல்லவில்லை. அதுதான் ஜனநாயகம்.

மும்மொழி கொள்கை
மத்திய அரசு ஒரு சட்டத்தை, திட்டத்தை கொண்டுவருகிறார்கள் என்றால் அதை மாநில அரசு வேண்டாம் என்று சொன்னால் விட்டுவிடவேண்டும். அதை அரசு சொல்லவில்லை, தமிழக மக்களின் குரல் அது. இந்திய அரசு சட்டப்படி பெரும்பாலான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. மக்களுக்கு உகந்ததாக இல்லாத விஷயங்களை அந்த ஆட்சி நிராகரிக்கலாம். ஆனால் பிடிவாதமாக நிதி கொடுக்கமாட்டேன் என்றால் அது ஆணவத்தின் உச்சம். இதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது கூட்டாட்சி தத்துவத்துக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்வது, ஏற்றுக்கொள்ளாததும் உங்கள் விருப்பம் என முன்னாள் பிரதமர் நேருவே சொல்லிவிட்டார். நீட் வேண்டாம் என்றால் திணிக்கக்கூடாது விட்டுவிட வேண்டும்.
தி.மு.க கட்சியை சேர்ந்தவர்கள் மும்மொழி கொள்கையுடன் பள்ளிகளை நடத்துவதாக அண்ணாமலை கூறியதாக நீங்கள் கேட்கிறீர்கள். அண்ணாமலை தனிப்பட்ட தாக்குதல் நடத்தியே பழக்கப்பட்டவர். தனியார் நிறுவனம் நடக்கிறது என்றால் அங்கு இதுதான் தயாரிக்க வேண்டும் என சொல்லக்கூடாது. அரசு விதிகளுக்கு உள்பட்டு அவர்கள் எதைவேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அரசு என்னச்சொல்கிறது, ஆட்சியாளர்கள் என்னச்சொல்கிறார், மக்களின் பிரதிநிதித்துவமான அமைச்சரவை என்ன சொல்கிறது, முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும். தமிழக மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் முதல்வர் பிடிவாதமாக இருக்கிறார். மக்களின் நலனே மாநிலத்தின் நலன் என நினைக்கிறார். இருமொழி கொள்கை போதும் என்றால் ஏன் திணிக்கிறார்கள். சர்வாதிகாரத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள்.
`பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடு 2-வது இடம்..’
டெல்லி ரயில் நிலைய நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் பற்றி மத்திய அரசோ, தோழமை கட்சிகளோ பேசாது. இங்கு எதாவது பங்காளி சண்டை நடந்தால் பேசுவார்கள். 42 சதவிகிதம் கிராமங்களிலும் நிர்வாகிகள் லிஸ்ட் வந்துள்ளது. ஒரு மாதத்தில் பணி நிறைவடையும். தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என சில நாள்களுக்கு முன் ஆளுநர் சொன்னார். பெண்கள் பாதுகாப்பில் இரண்டாவது மாநிலம் தமிழ்நாடு என்றார். ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அரசியலுக்காக மாற்றிமாற்றி பேசுகிறார்கள். தி.மு.க கொடியை கட்டிவிட்டு அ.தி.மு.க-வினர் கலாட்டா செய்தால் அதற்கு அரசு எப்படி பொறுப்பாகும், தி.மு.க எப்படி பொறுப்பாகும்.

`பத்திரிகையை முடக்குவது சர்வாதிகார போக்கு’
விகடன் இணையதளத்தை முடக்கியது கண்டனத்துக்குரியது. துணிச்சலாக அவர்கள் எழுதுகிறார்கள். எல்லோரையும்தான் தாக்கி எழுதுகிறார்கள். விமர்சனம் என்பது பத்திரிகையின் தர்மம். நான்காவது தூணாக இருக்கும் பத்திரிகையை முடக்குவது நியாயம் கிடையாது, தர்மம் கிடையாது. இதுவும் சர்வாதிகார போக்கு” என்றார்.

