
மகாராஷ்டிரம் புணேவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கணவனைக் கொன்றதற்காக மனைவியின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையில் தன் பிறந்தநாளுக்குத் துபாய் அழைத்துச்செல்லாதக் கோவத்தில் கணவரை மூக்கில் குத்தியதால் அவர் உயிரழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கொல்லப்பட்ட கட்டுமானத்துறைத் தொழிலதிபர் நிக்கில் கண்ணா, ஆறு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி ரேணுகாவைக் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், ரேணுகாவின் கடந்த பிறந்த நாளுக்கு விலையுயர்ந்த பரிசுகள் தராததாலும் துபாய் அழைத்துச் செல்லாததாலும் கணவருடன் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கும் தன்னை அழைத்துச் செல்லாததால் சண்டை ஏற்பட்டுள்ளது.
அந்தச் சண்டையில் அவரை ஓங்கி மூக்கில் குத்தியதில், அவரது மூக்கு மற்றும் பற்கள் உடைந்து அதிக அளவில் இரத்தம் கசிந்து அவர் உயிரழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சட்டப்பிரிவு 302-ன் கீழ் மனைவி ரேணுகா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

