மதுரை: மதுரை நகர் பா.ஜ.,வில் நியமனம், நிதி நிர்வாகம் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளதால் நிர்வாகிகளிடையே ‘குஸ்தி’ துவங்கியுள்ளது.
நகர் தலைவராக மகாசுசீந்திரன், நிர்வாகிகளை தன்னிச்சையாக நியமிக்கிறார், நிதிமுறைகேடு செய்துள்ளார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் மாவட்ட நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர், இளைஞரணி நிர்வாகி என 6 பேரை மையக்குழு ஒப்புதலின்றி நியமித்துள்ளார்.
இதுபோல நான்கு முறை மாவட்ட நிர்வாகிகள் சிலரை மாற்றியுள்ளார். அதன்பின் மொத்த நிர்வாகிகள் பட்டியலை வெளியிட வில்லை. மாநில தலைமை வழங்கிய ரூ.13 லட்சத்தை தன்னிச்சையாக செலவு செய்ததாக கணக்கு எழுதியுள்ளார் என மாநில தலைமைக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மாநில குழு விரைவில் விசாரிக்க உள்ளது.
மகாசுசீந்திரன் கூறியதாவது: என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. கட்சி நிதியை தனிப்பட்ட ஒரு நிர்வாகி எடுத்து பயன்படுத்த முடியாது. குழுவாகவே செலவிட முடியும். கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்குள்ளான சிலர் இதுபோன்ற புகாரை தெரிவிக்கின்றனர். முறையாக விளக்கம் தெரிவித்துள்ளோம். செயற்குழு உறுப்பினர்கள் 210 பேரை வைத்துதான் வரவு செலவை வாசித்து ஒப்புதல் பெறுவோம்.
தி.மு.க., அரசின் தவறுகளை எந்த கட்சியும் கண்டுக்கொள்ளாத நிலையில் நாங்கள் வேகம் காட்டுகிறோம். இதனால் கட்சியில் இருந்து வெளியேறியவர்களை பயன்படுத்தி சிலர் அவதுாறு பரப்புகிறார்கள் என்றார்.

