சென்னை: சமூக வலைதளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி குறித்து அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக எம்.பி கனிமொழி குறித்தும் சமூக வலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் அண்மையில் அவதூறு மற்றும் வதந்தி பரப்பப்பட்டது.
இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் தெரிவித்தார். இந்த புகார் மனு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.
கோவையை சேர்ந்தவர்… விசாரணைக்குப் பிறகு அவதூறு பரப்பியவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலு முருகானந்தம் (54) என்பது தெரியவந்தது.
கத்தார் நாட்டில் வேலை செய்து வந்த அவர், அங்கிருந்தவாறும் அவதூறு பரப்பி உள்ளார். அவர் கோவை வந்திருப்பதை அறிந்த சென்னை சைபர் க்ரைம் போலீஸார் அங்கு சென்று வேலு முருகானந்தத்தை கைது செய்தனர்.
அப்புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் @ananthamharshi என்ற எக்ஸ் கணக்கின் விபரங்களைக் கேட்டு அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி ஐ.பி விவரங்களை பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து ஐ.பி பயனாளர் விவரங்களை பகுப்பாய்வு செய்து கிடைத்த செல்போன் எண்ணை வைத்து கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேலு முருகானந்தம் (54) என்பவரை சென்னை சைபர் கிரைம் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். கத்தாரில் இருந்து சமீபத்தில் தான் அவர் ஊருக்கு வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து செல்போன் ஓன்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை சென்னை எழும்பூர் கூடுதல் குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தவறான செய்திகளை அதன் நம்பகதன்மையை சரிபார்க்காமல் பதிவிடவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களை போலீஸார் கேட்டுள்ளனர்.
சைபர் குற்றங்கள் தொடர்பாக ஏதேனும் புகார்கள் அல்லது சந்தேகங்கள் இருப்பின் ஆன்லைனில் தேசிய சைபர் கிரைம் Reporting Portal www.cybercrime.gov.in என்ற இணையதளம் வாயிலாக புகார் அளிக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

