மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்ட பட்ஜெட்டில் ‘ரூ’ என மாற்றியிருந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ வெளியிட்டு மு.க. ஸ்டாலின் பேசியுள்ளதாவது,
தமிழ்நாடு பட்ஜெட்டில் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்!
மொழிக் கொள்கையில் நாம் எந்த அளவுக்கு உறுதியாக உள்ளோம் என்பதைக் காட்ட ‘ரூ’ என மாற்றியிருந்தோம். அதனை மத்திய அரசு பெரிதாக்கிவிட்டது.
தமிழைப் பிடிக்காதவர்கள் இதனை பெரிய செய்தியாக்கிவிட்டனர். 100 நாள் வேலைத் திட்ட ஊதியம், பேரிடர் நிதி, பள்ளிக் கல்வி நிதியை விடுக்க வேண்டும் என 100 கோரிக்கைகளை முன்வைத்தேன். அது குறித்து பேசாத மத்திய நிதி அமைச்சர் ‘ரூ’-க்கு பதில் அளித்துள்ளார். அவர்களே பல பதிவுகளில் ‘ரூ’ என்றே குறிப்பிட்டுள்ளார்.
அதற்கெல்லாம் பதில் அளிக்காதவர்கள் ‘ரூ’-க்கு பதில் அளித்து வருகின்றனர். மொத்தத்தில் இந்திய அளவில் நம் தமிழும் ஹிட்; பட்ஜெட்டும் ஹிட்;
பட்ஜெட் குழுவில் பொருளாதார நிபுணர்கள் பலர் இடம் பெற்றிருந்தனர். மறுபுறம் அடித்தட்டு மக்களின் தேவைகள் என்னென்ன என்பதைத் தெரிந்துகொண்டோம். அதோடு மற்ற நாடுகளில் மக்களிடம் வரவேற்பு பெற்ற திட்டக்கள் என்னென்ன என்பதையும் ஆலோசித்துதான் இந்த பட்ஜெட்டை தயாரித்தோம்.
