Last Updated:
நான் நடுநிலையானவன் கிடையாது. நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன் – பிரதமர் மோடி
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மோதல் நடந்து வரும் நிலையில், அமைதிக்கான வழி குறித்து பிரதமர் மோடி தனது கருத்துக்களைப் பகிர்ந்து உள்ளார். பிரபல எழுத்தாளரும், செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வாளருமான லெக்ஸ் ப்ரீட்மேனுக்கு பிரதமர் மோடி பேட்டியளித்துள்ளார்.
அதில், உக்ரைன் பிரச்சினை குறித்து ப்ரீட்மேன் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மோடி அளித்த பதில் கூறியதாவது: “உக்ரைன் மற்றும் ரஷ்யாவுடன் இந்தியா நல்ல நட்புறவை வைத்துள்ளது. என்னால் ரஷ்ய அதிபர் புதினுடன் அமர்ந்து ‘இது போருக்கான நேரம் கிடையாது’ என்று பேச முடியும். அதேபோன்றுதான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் நட்பு ரீதியாகப் பேசி நிலைமையை எடுத்துரைக்க முடியும்.
ஜெலன்ஸ்கியிடம் பிரதர், உங்களுக்காக உலகில் எத்தனையோ மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள், போர்க்களத்தில் நம்மால் ஒருபோதும் நல்லதொரு முடிவை எடுக்க, எட்ட முடியாது’ என்று சொல்ல முடியும். போர் தொடங்கிய நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் சவாலானதாக இருந்தது. ஆனால், தற்போதைய நிலவரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்கிற நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது.
பேச்சுவார்த்தை மூலமாக இந்தப் போரை நிறுத்த முடியும். பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவும், உக்ரைனும் வந்து அமர்ந்தால் மட்டுமே நல்ல தீர்வு கிடைக்கும். உக்ரைன் நாடு அதன் நட்பு நாடுகளுடன் ஏராளமான ஆலோசனைகளை நடத்தியுள்ளது. ஆனால், எந்தப் பலனும் ஏற்படவில்லை. பேச்சுவார்த்தை என்பது இரு தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சினையில் இந்தியா எந்தத் தரப்புக்கும் ஆதரவாக இல்லை. ஆனால், இந்தியா அமைதியின் பக்கம், சமாதானத்தின் பக்கம் நிற்கிறது. இந்தப் போரினால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அவ்வளவு ஏன், உலக நாடுகளே இதனால் பாதிப்பு அடைந்துள்ளது.
இந்த யுத்தத்தால் உணவு, எரிபொருள், உரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, அமைதியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும். என்னைப் பொறுத்த அளவில் நான் எப்போதும் அமைதிக்கு ஆதரவாக உள்ளேன். நான் நடுநிலையானவன் கிடையாது. நான் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறேன்” என்று தெரிவித்தார்.
March 16, 2025 6:17 PM IST

