
Last Updated:
சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பரவி வரும் புதிய வகை வைரஸ், உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கம், உலக மக்களிடையே சற்றே குறைந்திருந்தாலும் இன்னும் முழுமையாக நீங்கவில்லை.
இந்நிலையில், சீனாவில் புதிதாக ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக வெளியாகியிருக்கும் தகவல் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹியூமன் மெடப்னியுமோவைரஸ் (human metapneumovirus) என்று பெயரிடப்பட்டுள்ள அது, சுருக்கமாக ஹெச்.எம்.பி.வி என அழைக்கப்படுகிறது. சீனாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு ஏராளமான மக்கள் மருத்துவமனைகளுக்குப் படையெடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட கொரோனாவை போலவே இருமல், காய்ச்சல், ஜலதோசம் உள்ளிட்ட அறிகுறிகளை இந்த ஹெச்.எம்.பி.வி கொண்டுள்ளது. இருமல், தும்மல், தொடுதல் உள்ளிட்டவை மூலம் எளிதில் பரவக்கூடியதாக இது உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகள் மற்றும் முதியவர்களை எளிதில் தாக்கும் தன்மையை இது கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய சுகாதாரத் துறை, தற்போது வரை அச்சப்படும் அளவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளது.
இந்த வைரஸால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்றாலும்,
மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், வைரஸ் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சளி, இருமல் பாதிப்பு இருந்தால் பிறரிடம் இருந்து விலகி இருப்பது அவசியம் எனவும், பாதிப்பு ஏற்பட்டால், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
January 04, 2025 7:56 AM IST
