Last Updated:
கருணாநிதி சிலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் மக்கள் பணத்தை சிலை அமைக்க பயன்படுத்தக் கூடாது என தீர்மானம் வழங்கி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
மக்கள் பணத்தை பயன்படுத்தி தலைவர்களுக்கு சிலை அமைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் காய்கறி சந்தை நுழைவாயில் அருகே, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கல சிலை மற்றும் பெயர் பலகை அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை நிறுவுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த சிலையை நிறுவ அனுமதி மறுத்ததோடு, பொது இடங்களில் இடையூறாக இருக்கும் சிலைகளை அகற்றவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு தலைவரின் புகழை பரப்புவதற்காக மக்கள் பணத்தை பயன்படுத்துவது ஏன் என்று வினவினர். மக்கள் பணத்தை பயன்படுத்தி சிலைகள் அமைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து மேல்முறையீட்டு மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Delhi,Delhi,Delhi
September 23, 2025 9:52 AM IST


