மூடப்பட்ட பாரில் மது வழங்க மறுத்த கோபத்தில் பார் ஊழியரான டிஜேயை துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொலை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள எக்ஸ்ட்ரீம் ஸ்போர்ட்ஸ் பாரில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. இன்று அதிகாலை காரில் வந்த ஒரு கும்பல், இந்த பாருக்குள் நுழைந்து மது கேட்டுள்ளது. அப்போது மதுக்கடை மூடப்பட்டிருந்தது. ஆனால், அங்கிருந்த ஊழியர்களிடம் மது வழங்கும்படி காரில் வந்த இளைஞர்கள் கேட்டனர். ஆனால், ஊழியர்கள் மது வழங்க மறுத்தனர். அப்போது பார் ஊழியர்களுக்கும், காரில் வந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதற்கிடையில், கோபத்தில் இளைஞர் ஒருவர் காரில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்தார். அப்போது பாரில் இருந்த டிஜே சந்தீப் என்ற சாண்டியை ( டிஸ்க் ஜாக்கி) அவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து வெளியேறினார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துப்பாக்கியால் சுட்டவர் தனது பனியனால் முகமூடி போல முகத்தை மறைத்திருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பார் ஊழியர்கள், துப்பாக்கியால் சுடப்பட்ட டிஜே சந்தீப்பை ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ராஞ்சி நகர டிஎஸ்பி ராமன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாரில் இருந்த சிசிடிவி கேமராவை கைப்பற்றி சந்தீப்பை சுட்டுக் கொலை செய்த கும்பல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராஞ்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு உயர்ரக ஸ்நைப்பர் துப்பாகிகள் வடநாட்டில் எளிதாக கிடைப்பதையே இந்த வீடியோ காட்டுகிறது. இதுபோன்ற பல சம்பவங்கள் சமீப காலத்தில் வடமாநிலங்களில் நடப்பது சாதாரணமாகிவிட்டது.


பீகார் மாநிலத்தில் நம் சென்னையில் உள்ள பல்லாவரம் சந்தையில் எப்படி பொருட்கள் விற்கப்படுகிறதோ அதே போல் பீகாரில் உள்ள சந்தையில் அனைத்து ரக துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட் லான்ச்சர்கள் அது நவீன ஸ்னைப்பர்கள் மற்றும் அதற்கு தேவையான தோட்டாக்கள் வெடிகுண்டுகள் கையெறி குண்டுகள் என அனைத்து வகை ஆய்தங்களும் கூவி கூவி விற்பனை செய்யப்படுகின்றன என்பதை சுமார் 20 வருடங்களுக்கு முன்பே இந்தியா டுடே வெளியிட்டு இருந்தது. அங்குள்ள காவல் துறையினர் இதை கண்டு கொள்வதில்லை. இந்த ஆயுத விற்பனையாளர்களுக்கு ஆளுங்கட்சியின் முழு ஆதரவும் உள்ளது