நாம் தமிழர் கட்சியின் தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமாரை படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைதுசெய்யாவிட்டால், மாநிலமெங்கும் போராட்டம் வெடிக்கும் என அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஒன்றிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் அன்புத்தம்பி சேவியர்குமார் அவர்கள் திமுகவின் வன்முறைக்கும்பலால் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். தம்பியின் உயிர்த்துணையான மனைவியையும், பெற்றெடுத்த இரு பெண் பிள்ளைகளையும் எப்படி தேற்றுவதெனத் தெரியாது மனம் கலங்கி நிற்கிறேன். நம்மோடு உறவாய் இருந்த தம்பியைப் பறிகொடுத்ததை எண்ணி, ஒவ்வொரு நொடியும் உள்ளம் பதைபதைக்கிறது. தம்பியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, இக்கொடுந்துயர் சூழ்ந்திருக்கும் வேளையில் முழுமையாகத் துணைநிற்கிறேன். தம்பியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் ஏற்பட்டப் பேரிழப்பாகும்.

படுகொலை செய்யப்பட்ட அரசு போக்குவரத்து கழக மெக்கானிக் சேவியர் குமார்
ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழ்நாட்டு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு, தம்பி சேவியர்குமார் படுகொலைக்குக் காரணமான கொலையாளிகள் அத்தனைப்பேரும் கைதுசெய்யப்பட்டு, உடனடியாகக் சிறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறினால், மாநிலம் முழுமைக்கும் பெரும் போராட்டம் வெடிக்குமென எச்சரிக்கை விடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்

