லக்னோ: உ.பி.,யில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இடையே ஏற்பட்ட சிக்கல் முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணியில் பிரச்னை இல்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிதாஸ், ‛‛சமாஜ்வாதி 63, காங்கிரஸ் 17 தொகுதிகளில் போட்டியிடும் ” எனக்கூறியுள்ளார்.
தேசிய அளவில் பா.ஜ.,விற்கு எதிராக அமைக்கப்பட்ட ‛ இண்டியா ‘ கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சில கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், சில கட்சிகள் தங்கள் மாநிலத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. உ.பி.,யிலும் சிக்கல் உண்டானது. மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்குவதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார். ஆனால், தொகுதிகள் ஒதுக்கீட்டில் பிரச்னை எழுந்ததாக தகவல் வெளியானது. இதனால், கூட்டணி உறுதி ஆகாமல் ராகுலின் பாத யாத்திரையில் பங்கேற்க மாட்டேன் என அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.
இந்நிலையில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. நிருபர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், ‛‛ அனைத்தும் நலம். சுமூகமாக முடியும். கூட்டணி அமையும். எந்த குழப்பமும் இல்லை. விரைவில் அனைத்தும் தெளிவாகி விடும்”.இவ்வாறு அவர் கூறினார்.
சமாஜ்வாதியின் கட்சியின் ரவிதாஸ் கூறுகையில், லோக்சபா தேர்தலை காங்கிரசும், சமாஜ்வாதியும் இணைந்தே சந்திக்கும். இதன் மூலம் கூட்டணி வலுப்பெறும். மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்போம். பா.ஜ.,விற்கு ஆதரவான ஓட்டுகள் பிரிவதை தடுக்க முயற்சி செய்வோம். சமாஜ்வாதி 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும். அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரியங்கா தலையீடு
இதனிடையே கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை முடிவுக்கு வர பிரியங்கா காரணம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ராகுலுடன் கலந்துரையாடிய பிரியங்கா , பிறகு தொலைபேசி வாயிலாக அகிலேஷ் யாதவுடனும் ஆலோசனை நடத்தியதாகவும், இதன் காரணமாக பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
