திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் – – வல்லுார் இடையேயான மாநில நெடுஞ்சாலை வழியாக காட்டுப்பள்ளியில் உள்ள, கப்பல் கட்டும் நிறுவனம், அத்திப்பட்டில் உள்ள எரிவாயு முனையங்கள், நிலக்கரி கையாளும் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு தினமும், 20,000 கனரக வாகனங்கள் பயணிக்கின்றன.
நிறுவனங்கள்
மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, மீஞ்சூர் — வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக மேற்கண்ட நிறுவனங்களுக்கு வந்து செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த சாலையில் தான் பயணிக்கின்றன.
தொடர் வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலை, கடந்த, இரண்டு ஆண்டுகளாக சேதம் அடைந்து கிடக்கிறது. சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன. அவற்றில் அவ்வப்போது நெடுஞ்சாலைத்துறையினர் கொட்டும் சரளை கற்களால் கடும் புழுதி ஏற்படுகிறது.
மீஞ்சூர் – வண்டலுார் வெளிவட்ட சாலை சந்திப்பில் தொடங்கி, பி.டி.ஓ. அலுவலகம், ரமணா நகர், புங்கம்பேடு, பட்டமந்திரி, வல்லுார் வரை, 2 கி.மீ., தொலைவிற்கு சாலை, புழுதி காடாக மாறி உள்ளது. புழுதி பறக்கும் சாலையில் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர்.
சாலையின் இருபுறமும், 250 கடைகள், நான்கு தனியார் பள்ளிகள், தனியார் மருத்துவமனை, 300க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன.
நாள் முழுதும் சாலையில் இருந்து வெளியேறும் புழுதியால் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
வருவாய் இழப்பு
வியாபாரிகள், தங்களது விற்பனை பொருட்கள் மீது துாசு படிந்து, வீணாவதை கண்டு வேதனை அடைந்துள்ளனர். துாசு படிந்து கிடக்கும் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க முன்வராத நிலையில் வருவாய் இழப்பிற்கு ஆளாகி உள்ளனர்.
குடியிருப்புகளின் உள்பகுதிவரை புழுதி படிவதால், வீட்டில் உள்ள உணவுப்பொருட்கள், துணிகள் துாசிபடிந்து வீணாகின்றன. நாள் முழுதும் வியாபாரிகளும், குடியிருப்புவாசிகளும் புழுதியை சுவாசிப்பதால், இருமல், தும்மல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் பல முறை தெரிவித்தும், சாலைக்கு விமோசனம் இன்றி கிடப்பதால், நரக வேதனையுடன் வசித்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ரமணா நகர் வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் தெரிவித்ததாவது:
கொரேனாவில் இருந்து விடுபட்டும் தொடர்ந்து முகக்கவசம் அணியும் நிலைதான் இங்கு உள்ளது. மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தோம்.
மழைக்காலம் முடிந்தவுடன், தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாகவும், ஏப்ரல் மாதத்தில், 16 கோடி ரூபாயில் தரமான சாலை அமைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
மழை விட்டு, 15 நாட்கள் ஆகியும் இதுவரை இங்கு எந்தவொரு பணியும் நடைபெறவில்லை.உடல்நலம் பாதிப்பு, விற்பனை பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வீணாவது என பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளோம்.
அதிகாரிகள், ஆட்சியாளர்களிடம் தெரிவித்தால், அலட்சியமான பதிலே வருகிறது. இங்குள்ளவர்கள் வாழ்வாதாரம் மட்டுமின்றி, உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. துரித நடவடிக்கையாக மீஞ்சூர் – வல்லுார் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

