க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்:
தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட உயர் நீதிமன்ற தீர்ப்பு, சரியான சாட்டையடி. அளவிற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததற்காக, அவருக்கு உயர் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதம் என தீர்ப்பு அளித்துள்ளது. பொன்முடி மனைவிக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் கூறி உள்ளது. இந்த தீர்ப்பை தி.மு.க., விசுவாசிகள் தவிர, அனைத்து தரப்பினரும் வரவேற்கின்றனர்.
தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் ஊழல் செய்வதிலும், சொத்துக்கள் குவிப்பதிலும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். சில நுாறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு, ஓட்டுகளை விற்பனை செய்யும் நிலைக்கு வாக்காளர்கள் வந்து விட்டதால் தான், ஆட்சியாளர்கள் கொள்ளை கூட்டமாக மாறி விட்டனர்.
ஏற்கனவே, ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஜாமினுக்காக காவடி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இலாகா இல்லா அமைச்சராக, மக்களின் வரிப்பணத்தை, ‘அபேஸ்’ செய்து கொண்டிருக்கிறார். கூடிய விரைவில், செந்தில் பாலாஜியும் நிரந்தர புழல் சிறை கைதியாக மாற வாய்ப்புள்ளது.
பொன்முடி அமைச்சராக இருந்தபோது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்ததால், சட்டசபையை விட்டு பாதியிலேயே வெளியேறினார், கவர்னர் ரவி. அப்போது பொன்முடி, அவரை, ‘போய்யா போ’ என்று கை காட்டி ஒருமையில் பேசியது; தமிழக அரசு, பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசபயணம் அறிவித்ததை, ‘ஓசி பயணம்’ என்று நக்கல் பேசியது என, அனைத்திற்கும் இன்று கிடைத்துள்ளது சம்மட்டி அடி.
‘பல நாள் திருடன் ஒரு நாள் சிறையில்… பாவம் செய்பவன் தலைமுறை வரையில்…’ என்ற, ‘என் மகன்’ திரைப்பட பாடல் வரிகள் தான் தற்போது ஞாபகத்திற்கு வருகிறது. ‘அரசன் அன்று கொல்வான்… தெய்வம் நின்று கொல்லும்’ என்பதை, இந்த தீர்ப்பு உறுதி செய்துள்ளது. மேலும், இது மற்ற அமைச்சர்களுக்கும் ஓர் எச்சரிக்கை மணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


