“கர்நாடகப் படுதோல்வியை மறைக்கவே 2000 ரூபாய் திரும்பெற்றதாக தமிழக முதல்வர் சாடியிருக்கிறாரே?”
“இதில் மறைக்க என்ன இருக்கிறது… கர்நாடகத்தில் காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறுவது என்பது கறுப்புப் பண ஒழிப்பு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான நடவடிக்கை. விஷச்சாராயம் அருந்தி 22 உயிரிழந்த சம்பவத்தை மறைக்கவே மு.க ஸ்டாலின் இப்படிப் பேசுகிறார்.”

“மம்தாவும், அகிலேஷ் யாதவும் மனம் மாறிவிட்டார்கள் போல் தெரிகிறதே, கூட்டணி அமைந்துவிடுமோ…?”
“கர்நாடகாவில் பா.ஜ.க வாக்குவங்கிக்கு எந்த பாதமும் ஏற்படவில்லை. மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வாக்குகள் மட்டும் காங்கிரஸ் வசமாகியிருக்கிறது. ஆகவே கூட்டல் கழித்தல் கணக்கில் ஆட்சியைப் பிடித்திருக்கிறது காங்கிரஸ். கர்நாடகாவில் மட்டும் 5 சதவீத வாக்குகள் அதிகமாகப் பெற்றுவிட்டு, காங்கிரஸ் வளர்ந்துவிட்டது, மீண்டெழுகிறது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள். இவர்கள் சொல்வதுபோலவே மு.க ஸ்டாலின், மம்தா, ராகுல் காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால், அகிலேஷ் யாதவ், நிதிஷ் குமார் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் என எல்லாரும் சேர்ந்து நிற்கட்டும். இதனால் யாருக்கு என்ன பயன்… தி.மு.க-வின் ஆதரவால் மேற்கு வங்கத்தில் மம்தா-விற்கு வாக்குகள் அதிகம் கிடைக்கப் போகிறதா… மம்தா அதரவால் தமிழகத்தில் மாற்றம் நிகழப்போகிறதா… பீகார், ஆந்திரா மாநிலத்தில் தி.மு.க நின்று வெற்றி பெறத்தான் முடியுமா… கூட்டணி அமைத்தாலும் அவர்களுக்கு பயனில்லை எங்களுக்குப் பாதகமில்லை.”

