டைனோசர்கள் அழிந்தது போன்று காங்கிரஸ் கட்சிக்கும், அடுத்த சில வருடங்களில் அழிவு நேரக்கூடும் என பாஜக மூத்த தலைவரான ராஜ்நாத் சிங் கணிப்பு வெளியிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியை பிக் பாஸ் வீட்டுக்கு ஒப்பிட்டும், அக்கட்சியின் தேய்வை டைனோசர் அழிவுக்கு ஒப்பிட்டும் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜகவின் பவுரி தொகுதி வேட்பாளர் அனில் பலுனியை ஆதரித்து, இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும், நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் குழப்பங்களும் உள்குத்து தாக்குதல்களும் அதிகரித்து இருப்பதையும் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்தார். மேலும் கடந்த சில மாதங்களாக ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி, பாஜகவின் இணைவதையும் அவர் சிலாகித்தார். அந்த தலைவர்களில் மிலிந்த் தியோரா, அசோக் சவான் போன்ற பெருந்தலைகளும் அடங்குவர். அவர்களில் அசோக் சவான் போன்றவர்களுக்கு பாஜக மாநிலங்களவை எம்பி பதவி அளித்து கவுரவித்துள்ளது.

டைனோசர்
“காங்கிரஸில் இருந்து தலைவர்களின் வெளியேற்றம் தொடர்கிறது. ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் இணைகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி, டைனோசர்கள் போல அழிந்துவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று ராஜ்நாத் சிங் கிண்டலடித்தார்.
“காங்கிரஸ் தலைவர்கள் நாள்தோறும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சி என்பது தொலைக்காட்சியில் பிக்பாஸ் வீட்டை பார்ப்பது போலாகி விட்டது. அந்த சண்டைகளில் ஒருவருக்கொருவர் ஆடைகளை கிழித்துக் கொள்கிறார்கள்” என்றும் அவர் எதிர்க்கட்சியான காங்கிரஸை சீண்டினார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி மீதும் ராஜ்நாத் சிங் பாய்ந்தார். மத்திய அரசின் அமைப்புகளைப் பயன்படுத்தி எதிரிகளை மத்திய அரசு குறிவைத்து வருவதாக, எதிர்க்கட்சிகள் தொடுக்கும் குற்றச்சாட்டுக்கு கடுமையாக பதில்வினையாற்றினார். “பாஜகவால் அர்விந்த் கெஜ்ரிவால் சிறைக்குப் போனார் என்று சொன்னாலும், அவருக்கு நீதிமன்றத்தில் ஏன் நிவாரணம் கிடைக்கவில்லை? நீதிமன்றத்தையும் நாம் கையில் எடுத்திருக்கிறோமா? இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்?” என்று விளாசினார்.
பாஜகவுக்கு மாற்றுக் கட்சியினர் தாவுவது தொடர்பான ’வாஷிங் மிஷின்’ குற்றச்சாடு குறித்து கேட்டபோது, ”அப்படியெல்லாம் இல்லை. எந்தவொரு குறிப்பிட்ட நபர்களையும் கைது செய்யும்படி விசாரணை ஏஜென்சிகளுக்கு அழுத்தம் தரப்படவில்லை” என்று சுருக்கமாக பதிலை முடித்துக்கொண்டார்.

இதுபோன்ற தேவையற்ற பேச்சுக்களை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும்