முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் இஸ்ரேல் நாட்டிற்காக உளவு பார்த்ததற்காக மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய தகவல்களின்படி, இந்த குழு இஸ்ரேலின் சார்பாக நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான மின்னணு ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் கத்தார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தீர்ப்பு புது தில்லிக்கும் தோஹாவுக்கும் இடையே இராஜதந்திர தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. கத்தார் முதல்நிலை நீதிமன்றம் வியாழக்கிழமை இந்த தீர்ப்பை வழங்கியது.
கைது செய்யப்பட்ட இந்தியர்கள் விவரம்…
கேப்டன் நவ்தேஜ் சிங் கில்,
கேப்டன் சவுரப் வசிஷ்ட்,
கமாண்டர் புரேனேந்து திவாரி,
கேப்டன் பிரேந்திர குமார் வர்மா,
கமாண்டர் சுகுணகர் பகாலா,
கமாண்டர் சஞ்சீவ் குப்தா,
கமாண்டர் அமித் நாக்பால்
மாலுமி ராகேஷ்.
அவர்கள் ஓமானியர் ஒருவருக்குச் சொந்தமான தனியார் நிறுவனமான் டோஹா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் என்ற பாதுகாப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.
“மரண தண்டனையின் தீர்ப்பால் நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம் மற்றும் விரிவான தீர்ப்புக்காக காத்திருக்கிறோம். நாங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சட்டக் குழுவுடன் தொடர்பில் இருக்கிறோம், மேலும் அனைத்து சட்ட வழிகளையும் ஆராய்ந்து வருகிறோம்” என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தோஹாவில் உள்ள கத்தார் உளவுத்துறை அதிகாரிகள் இந்திய கடற்படை வீரர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சரியாக தெரிவிக்காமல் ஆகஸ்ட் 2022 இல் கைது செய்தனர். இதனால் அவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

